பெண்கள் விடுதி ! :- வேண்டியதும், வேண்டாததும்…
ஆனந்தத்தையும் அச்சத்தையும் ஒரு மூட்டையாய்க்
கட்டிப் போட்டால் எப்படி இருக்கும். அப்படியான ஒரு அனுபவம் என்று சொல்லலாம் ஹாஸ்டல்
வாழ்க்கையைப் பற்றி. இதில் பள்ளி, கல்லூரி காலத்தைய ஹிட்லர் கட்டுப்பாடுகளுடன்
இருக்கும் ஹாஸ்டல்கள் ஒருவகை. அந்தக் கட்டுப்பாடுகளை மீறி அத்து மீறல்
சமாச்சாரங்களைச் செய்து திரியும் வசீகரத் திமிர் கல்விக் கால இளமையின்
சொத்து.
அந்தக் காலகட்டத்தையெல்லாம் தாண்டி சமூகத்துக்கு
வரும்போது இன்னொரு வகையான ஹாஸ்டல்கள் உதவிக்கு வருகின்றன. வீட்டை விட்டு
வெளியூர்களில் தனியே வேலை செய்பவர்களுக்கும், வேலை தேடுபவர்களுக்கும் இத்தகைய
ஹாஸ்டல்கள் தான் ஆபத்பாந்தவன்கள். ஆண்களுக்கு பெரும்பாலும் மேன்ஷன்கள் கை
கொடுக்கின்றன. பெண்களுக்கு ஹாஸ்டல்கள் தான். லேடீஸ் ஹாஸ்டல், விமன் ஹாஸ்டல்,
வர்க்கிங் விமன் ஹாஸ்டல் என பல பெயர்களில் பல வகைகளில் ஹாஸ்டல்கள் முகம்
காட்டுகின்றன.
சென்னை போன்ற பெரு நகரங்களில், சாதாரண
மக்களுக்குக் கிடைக்கும் வருமானத்தை வைத்துக் கொண்டு வாழ்க்கையை ஓட்டுவதே
கழைக்கூத்தாடியின் கயிற்று நடை போன்றது. அதிலும் ஒரு தனி வீட்டை வாடகைக்கு எடுக்க
வேண்டுமென்றால் அவ்வளவு தான். கிடைக்கும் சம்பளமே போதாது ! தனியே பர்சனல் லோன் தான்
வாங்கி வாடகையே கட்டவேண்டியிருக்கும். அப்படிப்பட்ட திகிலூட்டும் விலைவாசிக்கு
கொஞ்சம் ஆறுதல் நிழலாய் வந்து நிற்பது இந்த ஹாஸ்டல்கள் தான்.
செலவு கம்மி. நிறைய பெண்கள் சேர்ந்திருப்பார்கள்
என்பதால் கொஞ்சம் பாதுகாப்பு உணர்வு. பொழுதும் போகும். உணவுக்காக வெளியே அலைய
வேண்டிய அவசியம் இல்லை இப்படி ஏகப்பட்ட வசதிகள் ஹாஸ்டல்களில் உண்டு. அதேபோல ஹாஸ்டல்
வாழ்க்கை நிறைய நல்ல விஷயங்களையும் கற்றுக் கொடுக்கும். குறிப்பாக நண்பர்களோடு
சேர்ந்து வாழ்வது. பகிர்ந்து வாழ்வது, இருக்கும் வசதிகளைக் கொண்டு “அட்ஜஸ்ட்” பண்ணி
வாழ்வது, சில விஷயங்களில் தன்னிச்சையான முடிவுகளை எடுப்பது என ஏகப்பட்ட நல்ல
விஷயங்கள் இங்கே உண்டு. ஒரு வகையில் பெண்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்
இடங்களில் ஒன்று இந்த ஹாஸ்டல் எனலாம்.
அதே நேரம் தற்கொலைகள், ராகிங்கள், ரகசிய தவறுகள்
என ஏகப்பட்ட சிக்கல்களும் விடுதி வாழ்க்கையில் புதைந்து கிடக்கின்றன. இதனால்
ஹாஸ்டலில் தங்குபவர்கள் பல விஷயங்களில் முன்னெச்சரிக்கையாய் இருக்க வேண்டிய அவசியம்
ஏற்படுகிறது.
ஒரு ஹாஸ்டலில் போகும்முன் அதன் வரலாறைக் கொஞ்சம்
புரட்டிப் பாருங்கள். அதை நடத்துபவர்கள் யார் ? நம்பகத் தன்மை உடையவர்கள் தானா ?
ஏதேனும் மதம் சார்ந்த பின்னணியா ? என்பதையெல்லாம் அலசுங்கள். இணையத்தில் அந்த
ஹாஸ்டலின் பெயர் அடிபடுகிறதா ? மக்கள் அதைப்பற்றி என்னென்ன சொல்கிறார்கள்
என்பதையெல்லாம் கவனித்தால் விடுதி பற்றி பல விஷயங்கள் சடுதியில் உங்களுக்குக்
கிடைக்கும். அந்தத் தகவல்கள் எல்லாம் இருந்தால் ஒரு நல்ல ஹாஸ்டலைக் கண்டுபிடிப்பது
உங்களுக்கு எளிது !
ஹாஸ்டல் அமைந்திருக்கும் ஏரியாவையும்
கவனியுங்கள். ரொம்பத் தனிமையான இடமா ? ஆறுமணிக்கு மேல மருந்துக்குக் கூட ஆள்
நடமாட்டம் இருக்காத இடமா ? அமானுஷ்யமான ஒரு சூழலா ? பக்கத்துலேயே டாஸ்மாக் டான்ஸ்
தெரு இருக்கிறதா ? இப்படிப்பட்ட இடங்களை ஒதுக்கிட்டு வேற இடம் தேடறது உங்களுக்கு
நல்லது. பாதுகாப்பான, வெளிச்சமான, அதிக ஆள் நடமாட்டமுடைய, டீசண்டான
இடத்திலிருக்கும் ஹாஸ்டல்கள் உங்களுடைய முதல் தேர்வாய் இருக்கட்டும்.
ஹாஸ்டலில் சேர்ந்தாச்சா ! முதல் வேலை உங்கள்
ரூமில் இருக்கும் நபர்களைப் பற்றி தெரிந்து கொள்வது. ரூமுக்குள்ள போனதும் போகாததுமா
உங்களுடைய புராணங்களை அவிழ்த்து விட ஆரம்பிக்காதீர்கள். ரூமில் இருக்கும் நபர்
எப்படிப்பட்டவர் ? பூர்வீகம் எங்கே ? எங்கே வேலை செய்கிறார் ? அவருடைய குணாதிசயம்
எப்படி என எல்லா விஷயங்களையும் அறிந்து கொள்ளுங்கள். அதுவரைக்கும் கொஞ்சம்
அமைதியாகவே உங்களுடைய ஹாஸ்டல் நாட்கள் ஓடட்டும். “பத்து நிமிஷம் பேசினேன்
அதுக்குள்ள ஒண்ணுக்குள்ளே ஒண்ணாயிட்டோம்” டைப் நட்புகள் பலவும் பாதியிலேயே கரையும்
என்பதை நான் சொல்லத் தேவையில்லை !
ஹாஸ்டல்களில் ஒரு சிக்கல் உண்டு. “மன்னார் அண்ட்
மன்னார்” கம்பெனியில வேலை பார்க்கிறேன் என்று சொல்லிக் கொண்டு திருடும் நோக்கத்தோடு
சிலர் தங்கியிருக்கக் கூடும். கைக்குக் கிடைப்பதைக் கொஞ்சம் கொஞ்சமாய் சுருட்டும்
அத்தகைய பேர்வழிகளிடம் ரொம்ப எச்சரிக்கை தேவை. உங்கள் உடமைகளையெல்லாம் ரொம்பப்
பாதுகாப்பாய் வைத்திருங்கள். உங்க சொத்து, சுகம், வங்கி, சொங்கி விஷயங்களையெல்லாம்
எல்லாரிடமும் சொல்லிட்டுத் திரிய வேண்டாம். நுணலும் தன் வாயால் கெடும் எனும்
பழமொழியை மனசுக்குள் எழுதி வைத்திருங்கள்.
ஹாஸ்டல்களுக்கு வரும்போது வீட்ல இருக்கிற நகை
நட்டையெல்லாம் எடுத்துப் பையில போட்டுட்டு வராதீங்க. அவையெல்லாம் வீட்டிலோ, வங்கி
லாக்கரிலோ பத்திரமாக இருக்கட்டும். ரொம்ப ரொம்ப அவசியமான நகைகளை மட்டும் கையில்
வைத்திருங்கள். ரொம்ப மதிப்பு மிக்க பொருட்களை ஹாஸ்டலில் கொண்டு வராமல் இருப்பது
நல்லது. அப்படியே வைத்திருந்தால் கூட அதை வார்டனோட பாதுகாப்பில் வைத்திருக்க
முடிந்தால் ரொம்ப நல்லது !
நீங்க நீங்களாகவே இருங்க. உங்க ரூம்மேட் எப்படி
வேணும்ன்னாலும் இருக்கலாம். கிழிந்த பேண்ட் போடலாம், அல்லது முழுக்க போர்த்தி
நடக்கலாம், பர்தா போடலாம் அல்லது பாவாடை போடலாம். அது அவரவர் விருப்பம். யாரையும்
கிண்டலடிப்பதோ, அவர்களைக் காப்பியடிப்பதோ வேண்டாம். நீங்க தாவணி போட்ட தீபாவளியாய்
இருக்க விரும்புவது உங்கள் விருப்பம். அடுத்தவங்களைக் காப்பியடிப்பது சில வேளைகளில்
அவர்களுக்கே பிடிக்காமல் போய்விடும் என்பதையும் மனதில் கொள்ளுங்கள். குறிப்பாக
சிலருடைய நடை உடை பாவனைகள் அவர்களுடைய மதம் சார்ந்த நம்பிக்கையாய் இருக்க வாய்ப்பு
உண்டு. நீங்கள் நீங்களாக இருந்தால், தேவையில்லாமல் பிறருடைய மனதை நீங்கள்
புண்படுத்தும் வாய்ப்பையும் தவிர்க்கலாம்!
ஹாஸ்டலில் சட்டதிட்டங்கள் இருக்கும். “சட்டம்
இருப்பதே அதை மீறுவதுக்குத் தானே” ன்னு சினிமா டயலாக் பேசி நடக்காதீங்க. சட்டங்களை
மதியுங்கள். அப்போதான் உங்களுக்கு ஏதேனும் சிக்கல் வந்தால் கூட ஹாஸ்டல் நிர்வாகம்
உங்கள் பக்கம் நிற்கும். இல்லாவிட்டால் “அவ எப்பவுமே அப்படித் தான். எந்த
சட்டதிட்டத்தையும் மதிக்கிறதில்லை” என கை கழுவி வேடிக்கை பார்க்க வாய்ப்பு உண்டு.
அதே போல சட்ட திட்டங்களை எல்லாரும் மதிக்கிறது தான் ஹாஸ்டலோட நல்ல பெயருக்கும்,
பாதுகாப்புக்கும் கூட உத்தரவாதம் என்பதைச் சொல்லத் தேவையில்லை !
அதே நேரத்தில் பல ஹாஸ்டல்கள் அட்வான்ஸ்
விஷயத்தில் சில்லறைத் தனமாக நடந்து கொள்வதும் உண்டு. எனவே அட்வான்ஸ் எவ்வளவு ?
ஹாஸ்டலைக் காலி செய்யும் விதி முறைகள் என்ன ? எந்தெந்த சூழலில் அட்வான்ஸ் பணம்
பிடிக்கப்படும் போன்ற விஷயங்களை நேரடியாகவே கேட்டுத் தெரிந்து விட்டு ஹாஸ்டலில்
சேருங்கள்.
ஹாஸ்டல்ல இருக்கும்போது பொருட்கள் வாங்கறது,
கடைக்குப் போறது போன்ற சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட ஹாஸ்டல் நிர்வாகத்திடம்
ஐடியா கேட்பது ரொம்ப நல்லது. கூட இருப்பவர்களைப் பற்றி முழுசாகத் தெரிந்து கொள்ளும்
வரை அவர்களை கண் மூடித் தனமாக நம்பாமல் இருப்பதே நல்லது !
ஹாஸ்டல்கள் ஒருவகையில் ஹோட்டல்களைப் போல எனும்
நினைப்பும் இருப்பது நல்லது. ரகசிய கேமராக்கள் போன்ற பிரச்சினைகள் அடிக்கடி
ஹாஸ்டல்களில் நிகழ்வதுண்டு. எனவே கொஞ்சம் எச்சரிக்கை உணர்வு எல்லா இடங்களிலும்
இருப்பது பயனளிக்கும்.
பெற்றோரை விட்டுத் தனியே தூரமாய்
அமர்ந்திருக்கும் ஹாஸ்டல் வாழ்க்கை “தப்பு செய்தா என்ன ?” எனும் அசட்டுத்
துணிச்சலின் கதவைத் திறக்கும். உடனே தடாலடியா உள்ளே நுழைஞ்சுடாதீங்க. மெதுவா அந்தக்
கதவை அடைத்துவிட்டு உங்க வேலையைப் பார்க்கக் கிளம்பிடுங்க. புகை பிடிக்கும்
பழக்கம், தண்ணியடிக்கும் பழக்கம் என ஆரம்பித்து எல்லா வகையான தப்புகளுக்கும்
ஹாஸ்டல் நட்பு காரணமாகிவிடக் கூடும். மற்றவங்க கிண்டலடிச்சாலும் பரவாயில்லை.
தப்புகளில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பேன் எனும் மன உறுதி தான் முக்கியம்.
இந்தச் சின்னச் சின்ன விஷயங்களை மனசுக்குள்
எழுதிக் கொண்டால், ஹாஸ்டல் வாழ்க்கை உங்களுக்கு ஹேப்பி வாழ்க்கையாய் இருக்கும்
என்பதில் சந்தேகமில்லை.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக