ஏனைய இணைப்புகள்<><> இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது.

சனி, 17 டிசம்பர், 2011

கொள்ளையடிப்பது ஒரு கலை...


கொள்ளையடிப்பது ஒரு கலை...




இந்த வருட கோட்டாவாக என் தந்தையிடம் இந்த வித்தையை காட்டிய காவல் துறையினருக்கு என் வீர வணக்கங்கள். அதனால் இந்த மீள் பதிவு...

எங்க ஊரு நகை கடை பஜாருல வித்தியாசமான திருட்டெல்லாம் நடக்கும்.

ஒரு நல்ல நாள் நட்சத்திரம் பார்த்து, பெரும்பாலும் வெள்ளிக்கிழமை (ஏன்னா? சனி, ஞாயிறு கோர்ட் லீவு), ஒரு மந்தையில் இருந்து இரண்டு ஆடுகள் போல, ஒரு போலீஸ் ஒரு திருடனை கூட்டி வருவார். போலீஸ் பெரும்பாலும் 'கார்டன் சிட்டி' பெங்களூருவில் இருந்து வருவார்கள். திருடனும் திருடனும் (அதாங்க அவர் கூட வந்த போலீஸ்) அகஸ்மாத்தா ஒரு நகை கடையை தேர்ந்தெடுப்பார்கள். பின் அந்த போலீஸ் அந்த கடையில் வந்து உட்கார்ந்து கொள்வார். போலீஸ் ஆரம்பிப்பார்.

"நீங்க இந்த திருடன் கிட்ட இருந்து 100 பவுன் திருட்டு நகையை வாங்கியிருக்கீங்க. இது சட்டப்படி குற்றம்(!)"-ன்னு ஆரம்பிப்பார். 100 பவுன் என்பது ஒரு சிறிய நகை கடைக்கு. 'சிறிய' என்றால் அந்த கடையில் கல்லா பெட்டி மட்டுமே இருக்கும். கொஞ்சம் போல Jewellery shop மாதிரி அலங்கரித்திருந்தால், கொஞ்சம் பட்ஜெட் அதிகமாகும். இது அடிக்கடி நடப்பதால், பஜாரில் சோம்பலோடு தான் பரவும், 'ஹூம்! ஆரம்பிச்சுட்டாய்ங்களா?"-ன்னு. "அண்ணே இன்னைக்கு நம்ம ****** கடையில வெச்சுட்டாங்க"-ன்னு சொல்லி அந்த கடையில ஒரு மினி பொதுக்கூட்டம் நடக்கும். கூட்டம் இந்த கடைக்காரருக்கு உதவ. ஏன்னா! பின்னால இவங்களுக்கும் உபயோகமா இருக்கும் இல்ல? மனித குலம் is a social animal தானே!!!

நெத்தியடி படத்துல சாவு வீட்டுல ஒரு பெரிசு திண்ணையில உக்காந்து சரக்குக்கு காசு கரக்க ஆரம்பிக்குமே, அதுபோல, "சரி! நடந்தது நடந்து போச்சு(!!!!!). இதை நான் அப்படியே மூடி மறைச்சுடறேன். ஒக்காந்து பேசலாமா?"-ன்னு ஆரம்பிப்பார். இல்லை நாங்க சட்டப்படி பார்த்துப்பேன்னா என்ன நடக்கும்? அந்த கடைக்காரரை விசாரணைக்கு அழைத்து போவார் போலீஸ்காரர். எங்கே? பெங்களூருக்கோ அல்லது கர்நாடக எல்லை போலீஸ் சரகத்துக்கு எங்கேயாவது கூட்டி போவார். 'எப்படியும்' திரும்புவோம், அல்லது திரும்பாமலும் போகலாம். (சேட்டு) ஒருத்தர் இப்படி போய், பயங்கர உள் காயங்களோட திரும்பி வந்து கடைசியில் செட்டில் தான் செய்தார்.

(இதுல இன்னொரு கூத்து. இப்படி தெரியாம திருட்டு நகை வாங்கி ஜெயிலுக்கு போன ஒரு பாய், ஜெயிலுக்கு போய் வந்து ஒரு கடை ஆரம்பித்தார். ஜெயிலில் ஒரு திருடன் அறிமுகம் போல. ஒரு நாள் இவர் கடையை க்ராஸ் செய்த அந்த திருடன் சும்மா "வணக்கம் பாய்"-ன்னு ஒரு சலாம் போட்டுட்டு போக, அடுத்த நாள் போலீஸ் இவர் கடைக்கு வந்துடுச்சு "இவன் எதுக்கு உனக்கு வணக்கம் வெச்சான்?". அது ஒரு தனி கூத்து...)

மேலும், இவர்கள் வைத்திருப்பது கருப்பு பணம். அதுவும் இவர்கள் பயப்படுவதற்கு ஒரு காரணம்.

ஸோ, இப்பொழுது கடைக்காரர் தன் மற்ற கடைக்கார சகாக்களோடு 'உக்காந்து யோசிச்சு' இந்த சிக்கலான பிரச்சினைக்கு டீல் பேசுவார். கடைசியில் எல்லோரும் சேர்ந்து (திருடன் 1 + திருடன் 2 + கடைக்காரர்கள்), டார்கெட்டட் கடைக்காரருக்கு மொட்டை அடித்து, 50-75 பவுன் வரை, பைசல் செய்து திருடன் 1 + திருடன் 2 ஆகியோரை பாசத்தோடு வழியனுப்பி வைத்து, அடுத்த சான்ஸுக்கு காத்திருப்பார்கள்...16 வயதினிலே ஸ்ரீதேவி மாதிரி...


Tuesday, August 12, 2008

உசுரு




போன வாரம் மொபைல் வாங்க போன கதைய படிச்சிருப்பீங்க(ங்கிற நம்பிக்கையில)...போகும் வழியில் பாண்டி பசார் காவல் நிலையம் எதிரில் ஒரு கும்பல் நின்று கொண்டிருந்தது. எங்க கூட்டம் இருந்தாலும் தான் நாங்க எட்டி பார்ப்போமே! அந்த பழக்கத்தில் எட்டி பார்த்தால், ஒருவர் தலையில் பலத்த காயத்துடன் ரத்த சகிதமாக படுத்துக் கொண்டிருந்தார். அவர் மண்டையில் உள்ள சதைகள் அனைத்தும் பிய்ந்து நிறைய ரத்தம் சிந்திக் கொண்டிருந்தது. யாரோ அவரை தூக்க முற்பட்டார். அவர் உடல் வெட்டி வெட்டி இழுத்தது. அருகில் ஒரு இரு சக்கர வாகன ஓட்டி கீழே விழுந்த தன் வண்டியை எடுத்துக் கொண்டிருந்தார். அதனால், அப்பொழுது தான் இந்த விபத்து நடந்திருக்க வேண்டும். அடிபட்டவர் சாலையை கடக்க முற்பட்டவர் போல. அருகே ஒரு போக்குவரத்து காவலாளி, சிரித்தபடியே இன்னொருத்தருடன் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருந்தார். இன்னொருவர் அடிபட்டவருக்கு ஒரு சொம்பு நிறைய தண்ணீர் கொடுத்துக் கொண்டிருந்தார்.

அப்பொழுது நேரம் கடந்து கொண்டிருந்தது. சாலையில் சென்று கொண்டிருந்த ஒருவர் காரிலிருந்து இறங்கி நேரே எதிரில் இருந்த (எதிரில் என்றால் சாலையின் மறுபுறம்) காவல் நிலையத்திற்கு சென்று காவலர் ஒருவரை கூட்டி வந்தார். இவருக்கு கோபம். யாரும் உதவக்கூடிய நிலையில் இல்லை என்று. வந்த காவலரும் மேப் போடும் ஆவலில் தான் இருந்தார். சாலையில் இருந்தவர்கள் அந்த வழியே போகும் ஆட்டோக்களை நிறுத்த முயன்றால் எந்த ஆட்டோக்காரரும் நிறுத்தவில்லை. எல்லோரும் கையை காண்பித்து முடியாது என்று சென்று விட்டனர். நாங்கள் சாலையின் மறு பக்கம் நின்றிருந்தோம் (காவல் நிலையம் முன்பு). அந்த வழியே செல்லும் ஆட்டோக்களை நிறுத்த முயன்றோம். ஆனால் யாரும் நிறுத்த விரும்பவில்லை.

பின், அங்கு (அரட்டை அடித்துக்கொண்டு) இருந்த போக்குவரத்து காவலரிடம் மற்றவர்கள் அழுத்தி சொல்ல, அந்த வழியாக வந்த மற்றொரு ஆட்டோவை நிறுத்தி (இதை முன்னமே செய்யலாமில்ல...) உள்ளே இருந்த சவாரியை இறக்கிவிட்டு அடிபட்டவரை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது. அந்த ஆட்டோ ஓட்டுனரும் 100 ரூபாய் சவாரி போச்சே என்று புலம்பிக் கொண்டே அடிபட்டவரை ஏற்றிக் கொண்டு சென்றார்.

என்னதான் ஒருவர் மோசமாக காயம் பட்டாலும், அவரை சுற்றி நடப்பவை கண்டிப்பாக அடிபட்டவரால் (அவரையும் அறியாமலேனும்) உணர முடியும். அந்த நேரத்தில் சுற்றி இருப்பவர்கள் அவருக்கு உதவாமல் இருப்பதும் ஒரு வகையில் அவரை மேலும் மேலும் கொல்வதே. அவருடைய மன உறுதி கண்டிப்பாக குலையும். அவரால் காது கொடுத்து கேட்க முடியுமோ இல்லையோ, அவருக்கு தைரியம் சொல்ல வேண்டும், 'தேவா! மூச்சு விடு தேவா' என்பது போல.

'அன்பே சிவம்' படத்தில் நச்சென்று சொல்லப்பட்டிருக்கும். அடிபட்டு மருத்துவமணையில் சிவம் படுத்திருக்கும் பொழுது அவரை பார்க்க வரும் ராமசாமி படையாச்சியிடம் சிஸ்டர் ஒருவர் 'சிவம் மிக சீரியஸாக இருக்கிறார். கடினமான சொற்களைக்கூட தாங்கக்கூடிய நிலையில் இல்லை' என்று சொல்லுவார். உள்ளே செல்லும் ராமசாமி படையாச்சி, சிவமிடம் 'செத்துப் போ' என்று அழுத்தி அழுத்தி சொல்ல, சிவத்தின் பல்ஸ் வெகுவாக குறைய ஆரம்பிக்கும். அபாய கட்டத்தை அடையும் பொழுது அவர்களை வெளியேற்றி அந்த சிஸ்டர் 'டோன்ட் வொர்ரி மை சைல்ட். யூ வில் பெ ஆல்ரைட்' என்று (உதட்டசைவு மட்டுமே) பார்க்கும் சிவத்தின் பல்ஸ் நார்மல் ஆகும். இது ஒரு நல்ல உதாரணம். உயிர் பிழைப்பதற்கும் இறப்பதற்கும் நூலிழை தான் வித்தியாசம். நாமெல்லாம் எப்பொழுது தான் உணருவோமோ?

ஒவ்வொரு வருடமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் சாலை விபத்துக்களால் இறக்கிறார்கள் என்று NHAI சொல்கிறது. இதில் பெரும்பாலும் நிகழும் இறப்புகள் தடுக்கப்படக்கூடியவையே என்கிறது. நாம் செய்ய வேண்டியதெல்லாம், அடிபட்டவரை முடிந்த அளவில் விரைவாக மருத்துவமனை கொண்டு செல்லவேண்டும், அவ்வளவே. அடிபட்டவருக்கு எந்த மருத்துவமனைகளும் (at least) முதலுதவியாவது செய்யாமல் இருக்க முடியாது. இதையே உச்ச நீதிமன்றமும் உறுதி செய்திருக்கிறது.

சாலையில் செல்லும் பொழுது தினமும் ஓரிரு ஆம்புலன்ஸ்களையாவது பார்க்க நேரிடுகிறது. அப்பொழுது நம் மக்கள் நடந்து கொள்ளும் விதம் நம்மை பதபதக்கவைத்து விடுகிறது. ஆம்புலன்ஸுடன் போட்டி போட்டுக் கொண்டு பின்னாலேயே செல்கின்றனர் (மிஸ்டர். பீன் மாதிரி). அப்பொழுது தான் வழி சுலபமாக கிடைக்குமாம். ஒரு ஆம்புலன்ஸ் நம்மை கடக்க வேகமாக வருகிறதென்றால் நாம் நம்முடைய வாகனத்தை ஓரம் கட்டிவிடவேண்டும். அது நம்மை கடந்தவுடன் உடனே அதன் பின்னாலேயே போக கூடாது. காரணம், அந்த ஆம்புலன்ஸ் முன்னால் உள்ள மற்ற வாகனங்கள் ஓரம் கட்ட இடம் இல்லாமல் போய்விடும்.

நினைத்து பாருங்கள். ஒரு நாள் நாமும் அந்த வாகனத்தில் செல்ல நேரிட்டால் நம் மனநிலை எப்படி இருக்கும் என்று.



உங்களுடன் பகிர்ந்து கொள்ள



Right to Emergency Care

Supreme Court Judgement
Date of Judgment: 23/02/2007.
Case No.: Appeal (civil) 919 of 2007

The Supreme Court has ruled that all injured persons especially in the case of road traffic accidents, assaults, etc., when brought to a hospital / medical centre, have to be offered first aid, stabilized and shifted to a higher centre / government centre if required. It is only after this that the hospital can demand payment or complete police formalities. In case you are a bystander and wish to help someone in an accident, please go ahead and do so. Your responsibility ends as soon as you leave the person at the hospital.
The hospital bears the responsibility of informing the police, giving first aid etc.,
Please do inform your family and friends about these basic rights so that we all know what to expect and what to do in the hour of need. Please not only go ahead and forward, use it too!!!!




Road Accident

At Chennai.....If you happen to see/witness/involve in an accident.. Just dial +91-044-28150700 and inform them about the accident and place, REST THEY WILL TAKE CARE. This belongs to Trauma care consortium is a non profitable organization and they help people who need medical facilities because of a ROAD accident
Ambulance in Chennai
http://www.madrastimes.com/ambulance_HL.htm
Electricity in Chennai
http://www.madrastimes.com/electricity_HL.htm
Fire Station in Chennai
http://www.madrastimes.com/firestations_HL.htm
Hospital in Chennai
http://www.madrastimes.com/hospitals_HL.htm
Police Station in Chennai
http://www.madrastimes.com/policestation_HL.htm



Monday, May 05, 2008

இனியொரு உலகு செய்வோம். அதில் அமெரிக்கா இல்லாமல் பார்த்துக் கொள்வோம்.




"இந்திய நடுத்தர வர்க்கப் பிரிவினர் சத்தான உணவு உட்கொள்ள ஆரம்பித்திருப்பதுதான் உலக அளவில் உனவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம்" என்று (உலக) அமெரிக்க அதிபர் 'புஸ்' திருவாய் மலர்ந்திருக்கார். இதை கேட்டு (அமெரிக்க) இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் தேமேவென்று 7 ரேஸ் கோர்ஸ் சாலையில் இருந்து கொண்டு, 10 ஜன்பத் சாலையை நோக்கி லுக் விட்டு காத்துகிட்டிருக்கார்.

ஜோக்குகளில் பல வகை உண்டு. அதில் ஒரு வகை சாடிஸ வகை ஜோக்குகள். உதா, "நீங்க தான் மிஸ்டர். ஸ்மித்தின் விதவை மனைவியா?", "நான் ஸ்மித்தின் மனைவி தான். ஆனால் விதவை இல்லையே!", "கொஞ்சம் பொருங்கள். இப்பொழுது தான் அவர் உடலை கொண்டு வருகிறோம்". இந்த வகையான ஜோக்குகளை தான் புஷ் இப்பொழுது உதிர்த்திருக்கிறார்.

புஷ்ஷுக்கு என்ன தான் வேணுமாம்? அமெரிக்கர்கள் குறைந்த செலவில் சோறு சாப்பிட இந்தியர்களும் சீனர்களும் சத்தான உணவை உட்கொள்ளகூடாதுன்னு நெனைக்கிறாரா? சரியான மற கழன்ட கேஸு. இது புஷ் மாத்திரம் அல்ல. மொத்த அமெரிக்கர்களின் திமிரான போக்கையே காட்டுகிறது. அடுத்தவன் எப்படி போனாலும் கவலை இல்லை. ஆனால் தன் சொகுசுக்கு மட்டும் பங்கம் வந்துவிடக்கூடாது. இப்படித்தானே கேத்ரீனா புயலுக்காக அகதிகளாக வந்த அடுத்த மாகான மக்களை உள்ளே விடாமல் தடுத்தனர் டெக்ஸாஸ் மாகான மக்கள்? இது என்ன மாதிரி மனநிலை என்று தெரியவில்லை. இதில் உலகின் போலீஸ்காரன் என்ற கர்வம் வேறு. இப்படிபட்ட அமெரிக்கா இருந்தால் என்ன அழிந்தால் என்ன? அமெரிக்கர்களை பொருத்த வரை அவர்களுடைய உலக வரை படத்தில் வேறு எந்த நாட்டினருக்கும் இடம் இல்லை.

இதில் தலையாட்டி மன்மோகன் சிங் + பசி கூட்டனி வேறு என்ன தான் செய்வார்கள்? ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது. இவர்கள் மேதாவிகளாயிருந்து என்ன பயன்? நாடு அமெரிக்காவின் காலனியாதிக்கத்திற்கு உட்பட்டது தான் மிச்சம். இப்பொழுதே அமெரிக்காவில் மழை பெய்தால் இவர்கள் தும்முவதை விடவும் நம் பொருளாதரத்தையும் சேர்த்து தும்ம வைத்துவிட்டார்கள். கேட்டால், அமெரிக்காவில் Recession என்பார்கள்.

இன்னைக்கு இப்படி கூப்பாடு போடுறாரே புஸ்ஸு...அதுக்கு முக்கிய காரணம் வளர்ந்த நாடுகளே! இவர்கள் வெளியேற்றும் நச்சுக்காற்று தான் வளி மண்டலத்தை சூடாக்கி புவி வெப்ப மாறுதலுக்கு காரணமே. உலகில் ஆஸ்திரேலியாவின் மேல் இருக்கும் ஓசோன் படலமே அதிக பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. இதையும் விட சீனா இன்று வெளியேற்றும் நச்சுக் காரணிகளே அதிகம். இது அவர்களின் நீராதாரங்களை மெல்ல மெல்ல அழித்து வருகிறது. சீனா நாளையை பற்றி கவலைப்படாமல் இன்று முன்னேறுவதிலேயே குறியாய் இருக்கிறது. அன்னாச்சி அமெரிக்காவும் இதில் சளைத்தவர் இல்லை. முதலில் இந்த வளர்ந்த நாடுகளை ஒழித்துக் கட்டினால் உலகிற்கே நிம்மதி போலும்.

உணவு விஷயத்திலும், அமெரிக்கா போன்ற நாடுகள் எரிபொருள் தயாரிக்க உணவு பொருட்களை உபயோக்கின்றன. மக்காச் சோளத்திலிருந்து எத்தனால் தயாரிக்க கோதுமை பயிரிடவேண்டிய நிலத்தினில் மக்காச்சோளம் பயிரிட ஆரம்பித்தார்கள். இதுவும் கோதுமை அரிசி போன்ற உணவு பொருட்கள் உற்பத்தி குறைய காரணம். எரிபொருள் என்றுமே நன்மை தருவன அல்ல. அது வெளிப்படுத்துவது சூட்டை. இதுவும் புவி வெப்பமடைவதற்கு ஒரு காரணியாகும்.

எதிர்கால மழை குறைபாடுக்கு நம்மை நாம் இப்பொழுதே தயார் படுத்திக்க வேண்டும். அதற்காக உற்பத்தியை பெருக்க் வேண்டும். பாதிக்கப்படுபவர்கள் பசியே அறியாத 'பசி' அல்ல. நடுத்தர வர்கத்தினரும் அன்றாடங்காய்ச்சிகளும் தான். போன வருடத்தை விடவும் இந்த வருடம் விளைச்சல் என்னவோ அமோகம் தான். ஆனாலும் இது எதிர்காலத்திற்கு போதுமானதல்ல. வளார்ந்த நாடுகள் விவசாயத்தை நம்பி இல்லை. அடுத்தவன் விளைச்சலை காசு கொடுத்து வாங்குபவர்கள், பின்னாளில் நம்மால் கொடுக்கமுடியாத போது வளர்ந்த நாடுகளுக்கு 2 வழிகள் தாம் உள்ளன.

ஒன்று, அவர்களுக்கு மன்மோகன் இந்திய பிரதமராகவும் பசி நிதியமைச்சராகவும் இருக்கவேண்டும்.

அல்லது, உணவுக்கான உலகப் போர். (பின்ன புஷ்ஷின் பேச்சை பார்த்தால் தன் பசிக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்).

இனி அடுத்த உலகப்போர் தண்ணீருக்காக இருக்காது போல. அதையும் விட சீக்கிரத்தில் உணவுக்காக போரிட வேண்டும்.

இனியொரு உலகு செய்வோம். அதில் அமெரிக்கா இல்லாமல் பார்த்துக் கொள்வோம்.

தொடர்புடைய சுட்டி...
இந்தியர்களைவிட 5 மடங்கு அதிகம் சாப்பிடுபவர்கள் அமெரிக்கர்கள்


Friday, January 19, 2007

50. மணி - ஒரு நண்பனின் கதையிது





நம்முடன் விளையாடி, உறவாடிய நண்பன் ஒருவன் மனநிலை பாதிக்கப்பட்டு பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதை கண்டால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது எனக்கும்.

அவன் பெயர் மணி. எங்கள் தெரு தான். எதிர் வீடு. 'வெயிலோடு விளையாடி, வெயிலோடு உறவாடி'யவன். என்னை விட ஓரிரு வயது மூத்தவன். எல்லோரையும் போலத்தான் இருந்தான். தந்தை சிறிய வயதிலேயே இறாந்து விட்டார். தாயும், அவன் அண்ணனுடனும் வாழ்ந்து வந்தான். சிறிய வயதில் அவன் வயதுக்குறிய வளார்ச்சி அவன் அறிவுக்கு இல்லை தான். ஆனால், மற்றவரை போல தான். "எல்லோரும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் தாம். என்ன நான் கொஞ்சம் அதிகம் பாதிக்கப்பட்டவன்" என்று (இயக்குனர்) பாலா சொல்வார். அப்படித்தான் அவனும். பேச்சு கொஞ்சம் போல குழரி குழரி பேசுவான். அதனால் அவனுக்கு தெருவில் வைத்த பெயர் "புளுத்த வாயன்" (அந்த வலியெல்லாம் உணராத வயசு). அவனை அப்படி ஏதாவது சொன்னால் போதும் அவன் அம்மா சண்டைக்கு வந்துவிடுவார்கள். எங்களுடன் தான் விளையாடுவான். எங்கள் வீட்டின் அருகில் உள்ள அரசு பள்ளியில் தான் படித்தான்.

பின், ஒருநாள் அவனுக்கு ஆறுதலாய் இருந்த ஒரே சீவனான அவன் தாயும் இறந்தார். அப்பொழுது அவனுக்கு கூட இருக்க வேண்டியவர் அவர் அண்ணன் மட்டுமே. ஆனால், அவர் அவனை கண்டுகொள்ளவில்லை. அவர் திருமணம் ஆகி அவனை நிர்கதியாய் விட்டுவிட்டு சென்றுவிட்டார். சொத்திலும் பங்கு கொடுக்கவில்லை போல் இருக்கிறது. பிறகு அவனுக்கு என்ன நடந்தது என்று எனக்கும் தெரியவில்லை. காரணம், நானும் வேலை தேடி வீட்டை விட்டு கிளம்பி வந்து விட்டேன்.

அவன் தீவிர தி.மு.க. அனுதாபி. அவனை சீண்டவேண்டும் என்றால் கலைஞரை ஏதாவது சொன்னால் போதும். உடனே கோபம் வந்துவிடும். எங்கு இருந்தாலும் தேர்தல் என்றால் கட்டாயம் பூத்திற்கு வந்துவிடுவான். அவன் தான் பூத் ஏஜென்ட். அதனால், தேர்தலுக்கு அவனை கட்டாயம் தெருவில் பார்க்கலாம்.

கொஞ்ச நாள் பார்க்காமல் இருந்தேன். சில வருடங்களுக்கு பிறகு, ஒரு நாள் ஊரில் இருந்து சென்னை செல்லும் இரயிலில் அவனை பார்த்தேன். கூட ஒரு 7-8 சிறுவர்களுடன் இரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான். இரயிலை சட்டையால் சுத்தப்படுத்தி பின் காசு கேட்பார்களே, அதுபோல. அவன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். முதலில் அவனை எனக்கு அடையாளம் தெரியவில்லை. பின் கொஞ்ச நேரம் கழித்து அவன் வேலையை தொடர போய்விட்டான். பின் தான் உறைத்தது அவன் மணி என்று. பொது இடத்தில் அவனிடம் பேச எனக்கும் வெட்கமாக இருந்தது (ம்ஹூம்...இதை சொல்ல மட்டும் வெட்கம் இல்லை இந்த ராஸ்கலுக்கு). பின் தான் அவனுக்கு உதவாதது வருத்தத்தை தந்தது. அவன் என்ன எதிர்பார்த்திருப்பான்? கொஞ்சம் போல பணம். அவனுக்கு கொடுக்காததை நினைத்து எனக்கு நானே வெட்கப்படவேண்டியிருந்தது.

அப்புறம் அவனை தெரு பக்கம் காணவில்லை. இந்த பொங்கல் விடுமுறையில் ஊருக்கு சென்றிருந்த பொழுது (என் நண்பர்களில் ஒருவன் சொன்னது, "எல்லா சண்டாளன்களும் ஒன்னா வர்ராங்க. ஊர் என்ன ஆகப்போகுதோ?"), நண்பர்களுடன் அவன் கடையில் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது நாங்களெல்லாம் சத்தம் போட்டு சிரித்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது அங்கு வந்து நின்றான் மணி. மழிக்காத தாடியுடனும், தலைவிரிகோலமாக பார்க்கவே பரிதாபமாக இருந்தது. சற்று நேரம் எங்களையே பார்த்துக் கொண்டிருந்தவன், எதுவும் பேசாமல் வெறித்து பார்த்துவிட்டு பின் சென்றுவிட்டான். அவன் என்ன நினைத்திருப்பானோ? பின் அவனைப் பார்த்ததும் அங்கு நிசப்தம் நிலவியது. எங்கள் யாருக்கும் பேச்சே வரவில்லை. வெங்கி, "ஏண்டா! நம்ம கூட வெளயாடின ஒருத்தன இப்படி பாகுறப்போ நமக்கே பகீர்ன்னு இருக்குடா" என்றான். வெலவெலத்து போய்விட்டேன். உண்மை தான். என சொல்வது என்றே தெரியவில்லை.


Monday, January 01, 2007

48. புத்தாண்டு, மெரீனா, அரவாணிகள் - வாலிப வக்கிரம்




கடந்த இரு வருடங்களாக சென்னையில் வாசம். சென்ற வருட புத்தாண்டை என்னுடன் பனிபுரியும் ஆந்திர நண்பர்களுடன் கழித்தேன். இந்த வருடம் என்ன செய்யலாம் என்று யோசித்த பொழுது, சரி போன வருடமே தவறிவிடப்பட்டது, இந்த வருடமாவது மெரீனா போகலாமென்று முடிவெடுத்து இரவு சுமார் 11 மணியளவில் என் இரு சக்கர வாகனத்தில் சென்றேன். கையில் தான் காமெரா இருக்கிறதே, எதற்கு விடுவானேன் என்று கொண்டு போனேன். அங்கு சென்று சேரும் பொழுது 11:45 மணி. சுமார் ஆயிரக்கணக்கில் இருந்தது கூட்டம். ஒரே ஆர்ப்பரிப்புடன் குதூகலமாக இருந்தது.



புத்தாண்டும் பிறந்தது. அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் பரிமாரிக் கொண்டனர். மணி 12:30 ஆனது. சரி கிளம்பலாம் என்று வண்டியை எடுத்துக் கொண்டு கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் சாலையில் வந்தேன். அப்பொழுது சாலையில் ஒரு அரவாணி சென்று கொண்டிருந்தார். அவர் பார்ப்பதற்கு சராசரி பெண் போலவே தான் தெரிந்தார். அந்த அளவுக்கு மேக் அப் இருந்தது. அவளை கடந்து போன இரு வாலிபர்கள் அவளைப் பார்த்து ஏளானமாக சிரித்தனர். எனக்கு முதலில் புரியவில்லை. பின் தான் அது ஒரு அரவாணி என்று தெரிந்தது. அவளும் எதுவும் கண்டுகொள்ளவில்லை. கேலி கிண்டலுக்கு ஆளாகி பழக்கம் ஆனதால் போல. எனக்கு பரிதாமாக இருந்தது (பின்ன, நாங்க பாலா பாசறை ஆச்சே, மனுஷர் தான் எனக்கு அரவாணிகள் மேல் ஒரு பரிதாபம் கொள்ள கற்றுத் தந்தார்). பின் என் பார்வையில் இருந்து மறைந்து போனாள்.



பயங்கர கூட்டம் மற்றும் ஒரு வழிப்பாதையில் எதிரில் வந்த ஒரு அம்பாசடார் கார், 'சின்ன யானை' வண்டி ஆகியவையால் ஜாம் ஆகியது. அந்த இடத்திலேயே ஒரு அரை மணி நேரம் அங்கும் இங்கும் அசைய முடியாமல் ஆணியடித்தது போல மாட்டிக் கொண்டேன். அடடா! கொஞ்சம் போல தாமதமாக கிளம்பியிருக்கலாமே என்று (வழக்கம் போல) தாமதமாக யோசித்தேன்.



கடற்கரை சாலை, அந்த சாலையை ஒட்டி உள்ளே நான் நின்றிருந்த சாலை. இதற்கு நடுவில் பூங்கா போல புல் தரையுடன் அமைக்கப்பட்டிருந்தது. என் வண்டி நின்றிருந்த இடத்தில் ஒரு விளக்கு கம்பம் இருந்தது. திடீரென்று அங்கு ஒரே ஆர்ப்பரிப்பு தெரிந்தது. என்னவென்று பார்த்தால், அங்கு, மற்றொரு, அரவாணி (ஆண் போல தெரிந்தார்) ஆடிக்கொண்டிருந்தார். ஆட்டமென்றால், 'வசீகரா' பாடல் ஸ்டைலில் விளக்கு கம்பத்தை பிடித்துக் கொண்டு. அங்கிருந்த கூட்டமும் அவர் ஆடியதற்கு கை தட்டி உறசாகக் குரல்கள் எழுப்பின. எல்லாமே வாலிப கூட்டம். (இவருக்கு அந்த கூட்டம் வெத்த பெயர் 'ரீமா சென்'). முதலில் பார்த்த அரவாணிக்கு 'நயன்தாரா'.



இதற்கிடையில் அங்கு வந்து சேர்ந்த நயன்தாரா, இவர் ஆடும் ஆட்டம் பார்த்து அவனை ரெண்டு அடி அடித்தாள். அப்பொழுது அந்த இளவட்டங்கள் செய்த சேட்டைகள் படு கேவலமாக இருந்தன. அவளுக்கு வாழ்த்து சொல்லும் சாக்கில் கட்டிப்பிடித்து அவளை ஒரு வழி செய்தனர், கண்ட இடத்தில் 'கை' வைப்பது என்று. அந்த மின்சார கம்பத்தை தாண்டி கொஞ்ச தூரத்திற்கு 'சற்றே' இருட்டாக இருந்தது. இரண்டு மூன்று பேர் அவளை தள்ளி சென்றனர். அங்கே வாழ்த்த வந்த அனைவருக்கும் இலவசமாக ஒவ்வொரு 'கிஸ்' கொடுத்துக் கொண்டிருந்தாள்!!! அந்த பசங்களும் அவளை வலுக்கட்டாயமாக இம்சித்துக் கொண்டிருந்தனர். முதலில் திமிரியவள், பின் அவர்களுடன் சகஜமானாள். அங்கு 2, 3 என்று பின் அங்கு கணிசமான அளவில் அரவாணி கூட்டம் வந்து சேர்ந்தது. அங்கிருந்தவர்கள் சொன்னது, அவர்கள் அனைவரும் பாலியல் தொழிலாலர்கள் என்று. (இந்த இடத்தில் காவலர்கள் இல்லை, காரணம், காமராசர் சாலையில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தனர்).



அந்த பெண்ணும் ஒவ்வொரு முறை அந்த வாலிப கூட்டத்தில் இருந்து விடுபட்டுக் கொண்டு வெளியே வந்தாள். அப்படி வரும்பொழுது அவள் சட்டையில் பொத்தான்களை மாட்டிக் கொண்டே வந்தாள். இதில் கொடுமை என்னவென்றால், எனக்கு அருகில் இருந்த ஒரு ஆட்டோவில் நான்கு பெண்கள் இருந்தனர். அவர்களுக்கு முதலில் புரியவில்லை போலும். ஆட்டோவில் இருந்து தலையை வெளியே நீட்டி அங்கு நடந்த கூத்தை பார்த்துக் கொண்டிருந்தனர். இதில் ஒரு சின்ன பெண்ணும் அடக்கம். பின் தான் அவர்களுக்கு அந்த நிலைமையில் தீவிரம் புரிந்திருக்க வேண்டும். தர்ம சங்கடத்தில் நெளிந்தார்கள். ஆட்டோவோ அங்கும் நகர முடியாத நிலை. அதை விட கொடுமை, அந்த ஆட்டோவிற்கு பக்கத்தில் இரு சக்கர வாகனத்தில் ஒரு ஜோடி, கணவனும் மனைவியும் போல. அந்த பெண்மனிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, தலை கீழே குனிந்து கொள்வதைத் தவிற!!!



கொண்டு சென்ற காமெராவில் இந்த கருமத்தை எல்லாம் படம் பிடித்தேன். ஆனால் இருள் என்பதால் சரியாக விழவில்லை மற்றும் அந்த கேவலத்தை இங்கு வேறு டமாரம் அடிக்க வேண்டுமா என்று விட்டுவிட்டேன். நடந்த எல்லாவற்றிற்கும் அங்கிருந்த கூட்டம் செய்த சப்போர்ட் தான் என்னை அதிர்ச்சி ஆக்கியது. எங்கே போகிறது இளவட்டம்?



வாழ்க வாலிப வயசு வக்கிரம்!!! :(




Tuesday, December 26, 2006

47. ஏலே! பப்ளிக்-லே நாங்க!!




கடந்த வார விடுமுறையில் பாண்டிச்சேரிக்கு செல்லலாம் என்று முடிவு செய்து சனிக்கிழமை சென்று, 'வேண்டுதலை' நிறைவேற்றி திரும்பினோம். சுமார் 8:45 மணியளவில் கிண்டி இரயில் நிலையத்தில் வந்து சேர்ந்தோம். நானும் என்னுடன் இரு மலையாள Colleagues. நான் பழவந்தாங்கலில் இறங்க வேண்டும். அவர்கள், தாம்பரம் சானடோரியம். மூன்று பேருக்குமாய் பயண சீட்டு எடுத்துக் கொண்டு நடைமேடையை அடைந்தோம்.

அப்பொழுது இரயில் 9:45 மணிக்குத் தான் வரும் என்று அறிவிப்பு செய்தார்கள். 10 நிமிட பயணத்திற்கு 1 மணி நேரம் நிற்க வேண்டுமா என்ற கடுப்பு வேறு. அதற்குள் அங்கு நிலைய அதிகாரியின் அறை முன் கூட்டம் கூடியது (அந்த நிலைய அதிகாரி ஒரு பெண்). சனிக்கிழமை கால அட்டவணையையாவது ஒழுங்காக செயல்படுத்தலாமே என்று வாதம் செய்தார்கள். பின் அந்த அதிகாரி, எழும்பூரில் ஏதோ பிரச்சினையென்றும், அதன் காரணமாக இரயில் அனைத்தும் தாமதமாகும் என்றும் தெரிவித்தார். அங்கு நிகழ்ந்தவற்றை பதிவி செய்ய விரும்புகிறேன்.

* நான் அந்த அதிகாரியின் அறைக்கு சென்றது, இரயில் பயணத்தை தவிர்த்து பேருந்தில் செல்லலாம் என்று முடிவு செய்து, அந்த பயண சீட்டிற்கு பணம் திரும்ப கிடைக்குமா என்று விசாரிக்க.

* அங்கு கூட்டம் கூடியதும், ஒரே இரைச்சல் மட்டுமே மிஞ்சியது. நிலைய அதிகாரி எவ்வளவோ சமாதானம் செய்தும், யாரும் கேட்பதாக தெரியவில்லை.

* ஒருவர் அந்த அறைக்குள் நுழைய முயன்றார், ஆனால் அந்த அதிகாரி அங்கிருந்த காவலரை அழைத்து உள்ளே நுழைய முயன்றவரை வெளியே அனுப்புமாறு கூறினார். இதனால் அவர் மேலும் கோபமடைந்தார்.

* தான் 30 வருடங்களாக இரயிலில் பயணம் செய்வதாகவும், இப்படி பிரச்சினை வரும் பொழுதெல்லாம் கோடம்பாக்கம் இரயில் நிலையத்தில் இருந்து ஒரு இரயிலை திருப்பு அனுப்பிவைப்பார்கள் என்றும் அதன் படி இப்பொழுது செய்யுமாறும் அறிவுருத்தினார். அதற்கு அந்த அதிகாரி, தற்பொழுது தனக்கு அந்த அதிகாரம் இல்லை என்று விளக்கினார்.

* அங்கே இருந்த ஒருவர் (தலைக்கு டை அடித்துக் கொண்டிருந்தார்), 'மொதல்ல இந்த பொம்பள ஸ்டேஷன் மாஸ்டர மாத்துங்கப்பா. அதான் பிரச்சினையே' என்று கண்டுபிடித்தார்(!).

* இதற்குள் 20 நிமிடங்கள் ஓடிவிட்டன. பேருந்திலேயே போய்விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். சரி இங்கு நடந்தவற்றை குறிப்பெடுக்கலாம் என்று அங்கேயே நின்றுகொண்டிருந்தோம்.

* இப்பொழுது இரயில் 10 மணிக்கு வந்து சேரும் என்று மறு அறிவிப்பு செய்தார்கள். அவ்வளாவு தான். அங்கிருந்தவர்கள் இன்னும் கடுப்பானார்கள்.

* இப்பொழுது தான் மேட்டரே! அங்கு கூட்டத்தில் இருந்த ஒருவர், ஹிந்தியில் பேசிக் கொண்டே அந்த அதிகாரியை திட்டிக் கொண்டே இருந்தார். ஆரம்பித்ததே இவர் தான். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அங்கிருந்த இன்னொருவர், 'பாருங்க! ஒரு பிகாரி வந்து கேக்குறான். நாம இந்த ஊரிலேயே இருந்துகிட்டு அமைதியா இருக்கோம். வெட்கம்' என்று சொல்லி பின் பயங்கரமாக நக்கல் அடித்துக் கொண்டிருந்தார். ஆனால், கடைசியில் அந்த பிகாரி ஒரு கமென்ட் அடித்தார் பாருங்கள், 'மே லாலூகா தோஸ்த்...' அப்பொழுது தான் அவருக்கு சப்போர்ட் செய்து கொண்டிருந்தவர், 'அடப்பாவி! குடிச்சிருக்கானா அவன். ஏய்! அவன் ஓரங்கட்டுப்பா' என்று கடுப்பானார்.

* கூட்டத்தில் இருந்த இரு 'வாலிப வயசு' பசங்க, அந்த அதிகாரியிடம் சண்டை போட ஆரம்பித்தனர். அவர்கள் சண்டை கொஞ்சம் கொஞ்சமாக சீரியஸ் ஆனது. அவர்கள் ஆரம்பித்தது தான் 'நாங்க பப்ளிக்'. அந்த நிலைய அதிகாரியினால் எதுவும் செய்ய முடியவில்லை. இவர்களுக்கு ஏடு கொடுத்து சண்டையும் போட முடியவில்லை. 'உங்கள பாத்தாத் தான் சார் எங்களுக்கு B.P.ஏறுது. உங்களா சேஃபா அனுப்பினாத்தான் எங்களுக்கு நிம்மதி' என்று புலம்ப ஆரம்பித்தார்.

* ஆனால், அந்த இருவர் அடங்கவே இல்லை. ஒவ்வொரு பிரச்சினையாக எழுப்பிக் கொண்டிருந்தார். முதலில், பயண சீட்டு 1 மணிநேரம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படுமென்றும், ஒரு மணி நேரம் கழித்து காலாவதியாகிவிடும். அதனால், TTE வந்தால் என்ன செய்வது என்று கேட்டார்கள். அந்த காவலர், 'இரயில் தாமதமாக வருவது எல்லா நிலையங்களுக்கும் தெரியப்படுத்துவோம். அதனால், TTE புரிந்து கொள்வார்' என்று சமாதானப்படுத்தினார். ஆனால், அவர்கள் விடுவதாக இல்லை, 'அப்போ! நீங்க இருவரும் கூடவே வருவீர்கள் சரிதானே?' என்று நக்கல் அடித்துக் கொண்டிருந்தனர். காவலர் என்ன செய்வது என்று தெரியாமல் சிரித்துக் கொண்டிருந்தார்.

* இதையெல்லாம் அந்த மளையாள நண்பர்களிடம் நான் விளக்கிக் கொண்டிருந்தேன். இப்பொழுது கூட்டம் சற்று அமைதியாகவே, முன்பு கமென்ட் அடித்தவர் (டை பார்ட்டி), 'உள்ளே கூட விடமாட்டேன் என்கிறார்களே. என்ன அநியாயம்' என்று உசுப்பி விட்டார். உடனே அந்த இரண்டு பசங்களும், 'எவன் உள்ளே விட மாட்டேன்னு சொன்னான். நான் பப்ளிக் டா' என்று கத்த, அந்த டை பார்ட்டி இப்பொழுது தன் வேலை முடிந்தது என்று அமைதியானார். இந்த பிரச்சினை கொஞ்ச நேரம் கழித்து அடங்கியது.

* பின் கொஞ்ச நேரம் கழித்து அங்கிருந்தவர்களை திட்டிக் கொண்டிருந்தார். 'அவனும் கேட்க மாட்டான். ஏன்னா அடுத்த நாள் அதே வழியில போகனும் இல்ல' என்று திட்டிக் கொண்டே இருந்தார்.

அங்கிருந்தவர்கள் பெரும்பாலும் அலுவலகத்திற்கு வேலைக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்தவர்கள். அவர்கள் கோபமடைந்தது நியாயம் தான். ஒருவர் செங்கல்பட்டு சென்று அங்கிருந்து 10 கி.மீ. உள்ளே ஒரு கிராமத்திற்கு செல்லவேண்டும் என்று கூறினார். எல்லோரும் ரொம்ப களைத்து போயிருந்தனர். கோடம்பாக்கத்தில் இருந்து ஒரு இரயிலை திருப்பி விடலாம் என்று கூறியவர் கேட்டு அந்த அதிகாரி, தனக்கு இப்பொழுது அந்த அதிகாரம் இல்லை என்று சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார்.

இங்கு பிரச்சினையே, அந்த 2 பசங்களும், டை பார்ட்டியும் தாம். இந்த இருவர் 'நாங்க பப்ளிக்' என்று அந்த அதிகாரியை கடுப்பேற்றிக் கொண்டே இருந்தார்கள். அதுவும் அந்த இருவரில் ஒருவன், இரயில் வரவில்லை என்றால் கலாட்டா செய்வோம், கல்லடிப்போம் என்று மிரட்டிக் கொண்டே இருந்தார்கள். அந்த டை பார்ட்டியும் அவர்களை உசுப்பேற்றிக் கொண்டிருந்தார். அங்கிருந்த எல்லோருக்கும் கஷ்டம் தான். அந்த அதிகாரியும் ஒரு மனுஷி தான். அவங்கள கொஞ்ச நஞ்சம் டென்ஷன் பன்னல. இது அரிதாக ஏதோ பிரச்சினையால் இரயில் தாமதமானது, ஆனால் பப்ளிக்காக நாம் இப்படியா நடக்கவேண்டும்?


Wednesday, May 31, 2006

இது உங்கள் சொத்து - மறுக்கா மறுக்கா படி




சில நாட்களுக்கு முன் தற்செயலாய், வேகமாய் சேனல் மாற்றும் பொழுது, ஒரு கணம் பொதிகையை கடந்தேன். அட தெரிந்த முகம் என்று ஒரு நிமிடம் நின்று பார்த்தேன். நம்ம நித்யஸ்ரீ மகாதேவன். தன் பாட்டி பட்டம்மாவை பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார். அந்த பாட்டியின் மனதில் அப்படி ஒரு மகிழ்ச்சி. சில பாடல்களை பாடிக் கொண்டிருந்தார். வாழ மீனை கேட்கும் இடையில், இதையும் கொஞ்சம் கவனிக்கலாம் என்று தோன்றியது. சில நிமிடங்கள் அந்தப் பேட்டியையும், பேத்தியையும், அவர்கள் பாடிய பாடல்களையும் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தேன்.

விளம்பரங்களுக்கு நடுவே ஓடும் கள்ள உறவு + அழுகை மெகா தொடர்கள், "வண்கம்" தங்கிலீஷ் காம்பியர்கள், "நகைச்சுவை" செய்திகள்(?), சினேகாவுடன் உங்கள் சாய்ஸ், "வக்கிரமான jokes"-வுடன் லொள்ளு சபா, "சும்மா இருக்காத, அம்மா தான் எல்லாம்" என்ற டயலாக்கைக் கூட mute செய்த சன் டி.வி. கொண்டாட்டம் போன்ற நிகழ்ச்சிகளின் இறைச்சலில் நாம் ரொம்ப miss பண்ணின வகையராக்களில் இருந்தது அந்த நிகழ்ச்சி. பேட்டி கொடுத்த அந்த பாட்டியின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி, பெருமிதம். ஒரு குழந்தையாய் மாறி பேட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஏதோ நம் சொந்த பாட்டியைடம் பேசிக் கொண்டிருந்ததை போன்ற ஒரு உணர்வு. ஆனால், இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை மற்ற சேனல்களில் பார்க்க முடிவதில்லை. காரணம், எந்த நிகழ்ச்சியும் பணத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு தயாரிக்கப்படுபவை. பொதிகை சேனல் நட்டத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது (ஏன் ஓடாது?). அவர்களுக்கென்ன, அரசாங்கம் பார்த்துக் கொள்கிறது. பொதிகை லாபம் ஈட்டினால் என்ன? நட்டம் ஈட்டினால் என்ன? மாதச் சம்பளம் வந்துவிடுகிறது.

+2 தேர்வு முடிவுகள் வந்தது. பொதிகையில் இன்றும் தற்செயலாய் கண்டது. +2 தவறியவர்கள் தற்கொலை கூடாது என்று கவுன்சிலிங் வழங்கப்பட்டது. வழங்கியவர் கிரீஷ் கர்னாட். இதனை மற்ற எந்த சேனலும் செய்யவில்லை. அவர்களுக்கு வேண்டியது TRP ratings, அவ்வளவே. கிரிக்கெட் பார்ப்பதற்கு மட்டும் பொதிகையை tune செய்கிறோம். மற்ற நேரத்தில்?

இது பொதிகை-யோடு நின்றுவிடுவதில்லை. அரசாங்கத்தின் எந்த ஒரு நிறுவனத்தை எடுத்துக்கொண்டாலும் இதே நிலை தான். எத்தனை தனியார் பேருந்துகள் கிராமத்திற்கு போகின்றன? பேருந்தே நுழைய முடியாத கிராமத்தில் கூட அரசாங்க பேருந்துகள் நட்டத்திற்கு போய் வருகின்றன. ஆனால், தனியார் பேருந்துகள் நிலைமை என்ன? லாபம் வரக்கூடிய வழித்தடங்களில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எனக்குத் தெரிந்து திருச்சி - தஞ்சாவூர் வழித்தடத்தின் permit விலை மட்டுமே கோடியை தாண்டும். எங்கள் ஊரிலிருந்து வேலூர் செல்லும் பேருந்துகளில், தனியார் பேருந்துகளில் தான் கூட்டம் அதிகமாக இருக்கும். காரணம், கொண்டு சேர்க்கும் வேகம். ஆனால், உண்மை அதுவல்ல. திருப்பத்தூரிலிருந்து வாணியம்பாடி, ஆம்பூர், பள்ளிகொண்டா பின் வேலூர் செல்லவேண்டும். திருப்பத்தூரிலிருந்து வாணியம்பாடி வரை மிக வேகமாம சென்று, சில நிமிடங்களுக்கு வாணியம்பாடியில் கூட்டம் சேர்க்க நிறுத்திவிடுவார்கள். அதேபோல, வாணியம்பாடியில் இருந்து ஆம்பூருக்கு வேகமாக சென்று, பின் ஆம்பூரில் 15-25 நிமிடம் கூட்டம் சேர்க்க நிறுத்திவிடுவார்கள். ஆனால், மக்கள் அந்த பேருந்துகள் தான் வேகமாக சேர்க்கிறான் என்று கூட்டம் கூடும். இங்கே பொதுமக்கள் உயிர் தான் பணயம் வைக்கப்படுகிறது. (ஒரு முறை சென்று பார்த்தால் இதை உணரலாம்).

நான் ஒரு BSNL எண் வைத்துள்ளேன். பெங்களூரில் ஒரு விஞ்ஞானி கொல்லப்பட்டு நகரமெங்கும் ஒரே பரபரப்பாயிருந்தது. அப்பொழுது BSNL-ல் இருந்து ஒரு குறுந்தகவல். அது நகரத்தில் ஒரு வதந்தி பரவியிருப்பதாகவும், அதை நம்ப வேண்டாமென்றும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் தகவல் சொல்லப்பட்டிருந்தது. Caller tunes-க்காக சும்மா சும்மா குறுந்தகவல் அனுப்பி தொந்தரவு செய்யும் தனியார் செல் நிறுவனங்கள் அன்று எங்கே போயிருந்தன? அலுவலகத்தில் எனக்கொரு கைபேசி கொடுத்திருக்கிறார்கள். அதனால், அந்த BSNL எண்ணை திருப்பிக் கொடுத்துவிடலாமா என்று கூட யோசித்திருந்தேன். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு, செலவானாலும் அந்த எண்-ஐ அப்படியே வைத்து, இரண்டு கைபேசியையும் இப்பொழுது உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

நாமெல்லாம் என்ன செய்கிறோம். தனியார் பேருந்துகள் சினிமா போடுகிறான் என்று அந்த வண்டியில் தானே ஏறுகிறோம்? அரசாங்க சேவை என்றாலே அது கிராமத்து மக்களுக்கு என்றல்லவா நினைக்கிறோம். தனியார் நிறுவனங்களின் சேவை என்றால் ஓடிப்போய் வாங்குகிறோம். நமக்காக இருக்கும் அரசாங்க பொருட்களையும் உபயோகிப்போமே? எத்தனை பேர் காதி வஸ்திராலயத்தில் வாங்குகிறோம்? அல்லது, Cooptex-ல் துணி எடுக்கிறோம். மற்ற கடைகளில் 10 துணிகள் வாங்கினால், Cooptex-ல் ஒன்றாவது வாங்குவோமே. அந்த கைத்தரியை நம்பி எத்தனை குடும்பங்கள் இருக்கும்.

நம் அரசாங்கம் அளிக்கும் சேவைகளில் பல குறைகள் இருக்கின்றன. சேவைகள் முழுமையாக வழங்கப்படுவதில்லை தான். ஒத்துக் கொள்கிறேன். அதை படிப்படியாக மாற்றவேண்டுமே தவிற தவிர்க்க கூடாது. ஒரு பேச்சுக்கு, சென்னையின் தெருக்களில் தனியார் பேருந்துகளை அனுமதித்தால் என்ன நடக்கும் நினைத்துப் பாருங்கள். திருச்சியில் தனியார் நகரப் பேருந்துகளுக்கு அனுமதி உண்டு. அங்கே இருக்கும் போட்டியில், மக்களில் உயிர் பணயம் வைக்கப்படுகின்றது. வாகனங்கள் தறிகெட்டுப் ஓடுகின்றன. இந்த நிலை தான் சென்னையில் தனியார் பேருந்துகளை அனுமதித்தால் நிகழும். வெறும் வியாபார நோக்கம் மட்டுமே அங்கு முன்னிறுத்தப்படும். மக்கள் சேவை பின்னிறுத்தப்படும்.

ஒரு நாள் மட்டும் எல்லா சேனல்களையும் நிறுத்தி அனைவரும் பொதிகை மட்டுமே பார்க்க வேண்டும் என்று கொண்டு வந்தால் தெரியும் நம் அரசாங்கத்தைப் பற்றி.


Wednesday, May 10, 2006

வீணான என் ஓட்டு




மே 8!

சரி! இந்த தடவை(யும்) ஏமாறலாம்னு, அலுவலகத்துக்கு விடுமுறை எடுத்துகிட்டு(!), ஊருக்கு போனேன். இணையத்தின் உபயோகத்தால், நம்ம எதிர்ப்ப காட்டலாம்னு நமக்கு தரப்பட்டிருக்குற 49 ஓ option-ஐ உபயோகப்படுத்தலாம்னு தான் போனேன். என்னுடன் என் நண்பன் வெங்கியும் வந்திருந்தான். என் புண்ணியத்தில், அவனும் 49 ஓ போடலாம்னு என் கூட வந்திருந்தான். வரிசையில் நின்று கை விரலில் மை வைத்ததும் நடந்த உரையாடல்.

நான்: அங்கிருந்த பெண்மனியிடம், "நான் யாருக்கும் ஓட்டு போட விரும்பல".
பெண்மனி: ம்...ம்...(!!!)
நான்: "நான் யாருக்கும் ஓட்டு போட விரும்பல".
பெண்மனி: சரி! போங்க. (அவங்களுக்கு rules தெரியல போல, அவங்க சாதாரணமா என்னை அனுப்பினார்).
நான்: இல்ல. Form ஏதாச்சும் fill-up பன்னனுமா? Form இருக்கே.
பெண்மனி: தேவை இல்லை.
நான் சற்றே குழப்பத்துடன் வாசலை நோக்கி நடக்கத் துவங்கினேன்.
அந்த சமயம், அங்கிருந்த booth agents நான் வாக்களிக்காமல் வெளியேறுவதைக் கண்டு, கலவரமாகி, (அனைவரும் என் நண்பர்கள் தாம்), எல்லோரும் எழுந்து வந்து விசாரிக்க, அடுத்து வெங்கியும் 49 ஓ கேட்டு வாக்களிக்க விருப்பமில்லை என்று கூறியிருக்கிறான். அடுத்து அங்கே ஒரே கலவரமாகியது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. Election Officer நேரா என்னருகே வந்து விசாரிக்க, நான் 49 ஓ போடுவதாக கூறினேன்.
Election Officer: சார், அந்த பட்டன் இந்த தடவை வைக்கல.
நான்: சரி! Form கொடுங்க, fill-up செய்து கையெழுத்து (அ) கைநாட்டு வைக்கிறேன்.
Election Officer: எங்களுக்கு form தரப்படவில்லை.
எனக்கும் Election Officer-க்கும் வக்குவாதம் நடந்து கொண்டிருக்க, அதற்குள் booth agents-ம் என்னை சூழ்ந்து கொண்டனர். எனக்கு ஒன்றும் புரியவில்லை. பின், அவர்கள் பேசியதில் இருந்து ஒன்று மட்டும் புரிந்தது. அதாவது, அவர்களுக்கு நான் 49 ஓ போடுவதில் விருப்பமில்லை. மேலும், நான் ஒரு கட்சியின் அனுதாபி என்று நினைத்து, மற்ற கட்சி நண்பர்கள் அமைதியானார்கள். நான் சொன்னதிலேயே உருய்தியாக இருக்க, அடுத்து வெங்கியும் வாக்களிக்க விருப்பமில்லை என்று சொல்லிவிட்டான். எல்லோரும் சேர்ந்து அவனை வசை பாடி மிரட்ட ஆரம்பித்து விட்டனர்.
இதற்கிடையில் அந்த Election Officer என்னிடம் வந்து
Election Officer: "சார்! தயவு செஞ்சு யாருக்காவது உங்க ஓட்டுப்போட்டுடுங்க. இல்லேன்னா counting-ல பிரச்சினை வந்துடும்"
நான்: Form கொடுங்க, fill-up செய்து கைநாட்டு வைக்கிறேன்(-ன்னு சொன்னதையே சொல்ல).
Election Officer: இல்ல! இங்க பிரச்சினை ஆயிடும். தயவு செஞ்சு சுயேச்சைக்காவது ஓட்டுப் போடுங்க. உங்களுக்கு பின்னால நிறைய பேர் வெயில்ல நிக்கிறாங்க பாருங்க (பார்றா!).
எனக்கு பிரச்சினையை பெரிசாக்க விரும்பலை. அங்கே நடந்த கலவரங்கள பாத்து, வரிசையில் கடைசியில் இருந்த ஒரு சுயேச்சைக்கு என் ஓட்டைப் போட்டேன்.
அங்கே இன்னும் வெங்கி சண்டைப் போட்டுக் கொண்டே இருந்தான். நான் அவனிடம் யாருக்காவது போட்டுட்டு வரச் சொன்னேன். அவனும் என்னைப்போல வரிசையில் கடைசியில் இருந்த அந்த சுயேச்சைக்கு ஓட்டைப் போட்டான்.
வெளியே வந்த பொழுது booth agent-ல் ஒருவன் பின்னாலேயே வந்து என்னிடமும் வெங்கியிடமும் சண்டை போட்டுக்கொண்டே இருந்தான்.

(இதற்கிடையில், மற்றொரு பூத்தில் வாக்களிக்கச் சென்ற மற்ற நண்பர்கள், 17B form fill-up செய்து, வெற்றிகரமாக 49 ஓ பதிவு செய்துட வந்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள்). ஆக, முதல் படியை எடுத்து வைச்சாச்சு.


Thursday, March 02, 2006

சரிகிறதா நான்காவது தூண்?




"பாரத நாடு பழம்பெரும் நாடு...". இது திரையரங்குகளில் Film Division வழங்கும் குரும்படங்களில் வரும் முதல் வரி. உண்மையாகவே பாரத நாடு பழம்பெரும் நாடுதான். அதன் பழம்பெருமைகளில் முக்கியமானது அதன் ஜனநாயகம். நம்நாட்டைப் பொறுத்தவரை அந்த ஜனநாயகத்தைக் கட்டிக்காக்கின்ற(?) தூண்கள் என நான்கு விஷயங்களைச் சொல்வார்கள்.

1. நாடாளுமன்றம் / சட்டமன்றம்
2. நீதித்துறை
3. காவல்துறை / ராணுவம்
4. பத்திரிகைகள்

எனக்குத் தெரிந்து இந்த நான்கு தூண்களில் "சற்றேனும்" உருப்படியாக இருப்பது நீதித்துறை தான் (ராணுவத்தை குறிப்பிடவில்லை). முதல் மூன்று தூண்களின் நடவடிக்கைகள் மக்களிடம் சென்று சேர்வதற்கு முக்கியமானது பாலமாக இருப்பது அதன் நான்காவது தூண். இந்தியாவின் சுதந்திர போராட்ட காலம் முதல், சமீபத்தில் நடந்த கார்கில் போர் வரை நடப்பவை என்ன என்று, கார்கில் போராக இருந்தாலும் (அதில் நடந்த சவப்பெட்டி ஊழலாக இருந்தாலும்), மக்களுக்கு உணர்த்தியது பத்திரிக்கைகள் தாம். வாட்டர் கேட் ஊழல் முதல், குவாட்டர் ஊழல் வரை அத்தனையும் வெளிக்கொணர்வது ஊடகம்.

இப்படி மேலே கூறியபடியெல்லாம் பழம் பெருமை பேசவேண்டும் என்று தான் எனக்கும் ஆசை. ஆனால், உண்மை என்று ஒன்று இருக்கிறதே. ஒரு முறை சும்மா பரீட்சித்து பார்க்கலாமே என்று ஒரு வாரம் வந்த பத்திரிக்கைகளை எல்லாம் ஒரு நோட்டம் விட்டேன். இது, சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு. அதுவும் முக்கியமாக புலனாய்வு பத்திரிக்கைகளை. ஜூனியர் விகடன், நக்கீரன், குமுதம் ரிப்போர்ட்டர், நெற்றிக்கண், தமிழன் எக்ஸ்பிரஸ், முக்கியமாக மாலை மலர் மற்றும் மாலை முரசு. அவையாவிலும், ஒரு வாரத்தில் மட்டும், வந்த cover story எல்லாம் sex-ஐ முன்னிறுத்தியே இருந்தன. sex என்றால் கலவி இல்லை. Sex மற்றும் அதன் தொடர்பான குற்றங்களைப் பற்றியது. கற்பழிப்பு, கொலைகள், ஊழல், இவை எல்லாவற்றை விடவும் அதிகம் இடம் பெற்றது, ஓர் இனச் சேர்க்கை பற்றி. தவறாக பொருள் கொள்ள வேண்டாம். சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு எத்தனை பேருக்கு Homosexual / Lesbian பற்றி தெரிந்திருக்கும் அல்லது அந்த வார்த்தைகளையாவது கேள்விப்பட்டிருப்பார்களா? நிச்சயமாக இருக்காது. ஆனால், இப்பொழுது? இந்த வார்த்தைகள் இப்பொழுது எவ்வளவு பிரபலம். அப்படியே இயற்கையாக அங்காங்கே ஒன்று இரண்டு என நடந்தாலும், அதை cover story-ஆக போட்டு காசு பார்த்தவர்கள் தானே நம் பத்திரிக்கைகள். எல்லாம் அந்த பத்திரிக்கைகளின் புண்ணியம். சரி! வாங்கிப் படிக்கிறவர்களுக்கு அறிவு இல்லையா என்று கேட்கலாம். ஐயா, மனித மனம், நீங்களாக இருந்தாலும் அல்லது நானாக இருந்தாலும், நல்லதை விட கெட்டதை தேடிப் போகும் குணம் உடையது சாரே. குழந்தையிடம் நெருப்பை தொடாதே என்று சொன்னால் அது தொடாமல் இருக்குமா? (நான் சப்பைக் கட்டு கட்டவில்லை. ஆனால், இது தான் உண்மை).

உதாரணமாக, நெற்றிக்கண் பத்திரிக்கையில் வந்த ஒரு வாரத்திய cover story. அது, ஜெயேந்திரர் கைது செய்யப்பட்ட கால கட்டத்தில் வந்தது. "ஜெயேந்திரர் விஜயேந்திரர் லோடு ஏற்றிய பெண்கள் லிஸ்ட்" - இது தான் அந்த தரங்கெட்ட பத்திரிக்கையின் ஒரு வாரத்திய cover story. இந்த வாக்கியமே அந்த பத்திரிக்கையின் அட்டைப்படத்தினை அலங்கரித்தது. ஜெயேந்திரர் விஜயேந்திரர் யாராகவும் இருக்கட்டும். அவர்கள் எந்த மத்தத்தின் தலைவராகவும் இருக்கட்டும் அல்லது இல்லாமல் போகட்டும். அவர், குற்றவாளியா இல்லையா என்று, இந்த பக்கம் எழுதிக்கொண்டிருக்கும் வரையில், நமக்குத் தெரியாது. ஆனால், அவகளைப் பற்றி வந்த ஒரு cover story இது. கேவலமாக இல்லை?

மாலைப் பத்திரிக்கைகள் இன்னும் ஒரு படி மேலே. அதுவும், எங்காவது ஒரு கற்பழிப்பு நடந்துவிடக் கூடாது. அவர்களுக்கு ஒரே கொண்டாட்டம் (அடக்கடவுளே). கற்பழிப்பு எப்படியெல்லாம் நடந்தது ("கதற கதற", "விரட்டி விரட்டி"), அதன் கொடுமை என்ன என்று நம் கண் எதிரே கொண்டுவந்து நிருத்துவதற்கு அவர்கள் விவரிக்கும் பாங்கு இருக்கிறதே...அடடா! நாளெல்லாம் சொல்லி சொல்லி புளங்காகிதம் அடையலாம்.

அட! இந்த புலனாய்வுப் பத்திரிக்கை தான் இப்படி என்றால், வார நாளிதழ்கள்? முன்னொரு காலத்தில், சிறு வயதில் (ஆம்...கனவேதான்) ஆனந்த விகடன் வாங்கினால், அந்த வார cover story-யை அட்டைப்படமாக பிரசுரிப்பார்கள். எதாவது ஒரு குடும்பத்தின் குழு புகைப்படம் / cover story-க்கு ஏற்றவாறு ஏதேனும் இருக்கும். (மற்றும் ஒரு அட்டைப்பட ஜோக் நிச்சயம் இருக்கும். முதலில் புத்தகம் கைக்கு வந்தவுடன், அதைத்தான் விரும்பிப் படிப்பேன்). ஹூம்...இப்பொழுது? கண்டிப்பாக எதாவது ஒரு நடிகையின் (நமீதா அல்லது நவ்யா நாயர்) புகைப்படம் தான் பளிச்சிடுகிறது. குமுதம்? கேட்கவே வேண்டாம். அதன் நடுப்பக்கமே அந்த புத்தகத்தைப் பற்றி சொல்லிடுமே. Circulation சரியும் பொழுதெல்லாம் நிச்சயம் "ஒரு நடிகையின் கதை"-யை கண்டிப்பாக எதிர்பார்க்கலாம்.

இங்கு தான் இப்படியென்றால், போன வாரம் பாண்டிச்சேரி சென்றிருந்தேன். அங்கே ஒரு புலனாய்வுப் பத்திரிக்கையில் வந்தது "மானக்கெட்ட குமாரசாமியும் அவர் ஆட்சியும்" என்று. இதை தமிழ்நாட்டில் பிரசுரிக்க அந்த பத்திரிக்கைக்கு தைரியம் இருக்குமா என்று எனக்குள் நானே எண்ணிச் சிரித்துக் கொண்டேன்.

இவையெல்லாம் circulation சம்பந்தப்பட்டவை. ஆனால், இந்த சன் டி.வி-யும் ஜெயா டி.வி-யும் போடும் சண்டை இருக்கிறதே...நான் குறிப்பிடுவது நேரிடையான சண்டை மட்டும் இல்லை. மறைமுகமாகவும். ஒரு cheap-ஆன உதாரணம். டிசம்பர் 26, 2004 ஆழிப் பேரலை (சுனாமி) வந்த அன்று, சன் டி.வி-யில் அதன் பாதிப்புகளை காண்பித்துக் கொண்டு வந்ததார்கள். ஒரு மருத்துவமனையில் ஒரு தாய் இறந்து போன தன் குழந்தையை நிமிர்த்தி உட்கார வைத்து அழுது கொண்டு இருந்தார்கள். இது செய்தி. சற்று நேரம் கழித்து ஜெயா டி.வி.யில் அதே செய்தி. அதே மருத்துவமனையில். அதே தாய். ஆனால், இந்த தடவை, ஜெயா டி.வி.காமிராமேன் காட்டிய visual-லில் ஒரு அமைச்சரும் இருக்கிறார் (வேற angle). சன் டி.வி. செய்தி சேகரிக்கும் செய்தியாளர் அந்த நேரத்தில் அமைச்சரை ஏன் காட்டவில்லை? இதை இங்கே சொல்லவே நா கூசுகிறது.

இங்கே குறிப்பிடப்படாத பத்திரிக்கைகள் எல்லாம் யோகியமானவை இல்லை. பக்கம் போதாதே என்று தான் குறிப்பிடவில்லை.

இந்த பத்திரிக்கைகளுக்கு தேவை எல்லாம், circulation, circulation, circulation. அதைத் தவிர வேறெதுவும் இல்லை. தற்சமயம் பாருங்கள், இத்தகைய cover story எல்லாம் (தற்போதைக்கு) காணாமல் போய்விட்டன. காரணம் "Election" சாரே. இந்த தேருதலுகான்டி முடியட்டும், அப்பால சும்மா இன்னா சவுண்டு குடுத்து அடிக்கிறாங்கோன்னு கண்டுக்கோங்கோ...


Wednesday, September 21, 2005

சில நேரங்களில் சில மரணங்கள்...




சமீபத்தில் நான் கேட்ட ஒரு மரணச் செய்தி சற்றே மிகுந்த மனவேதனையை அளித்தது. சில மாதங்களுக்கு முன் நான் பெங்களூரில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அங்கே ஸ்ரீராமபுரத்தில் ஒரு mansion-ல் நண்பர்களுடன் வசித்து வந்தேன். அங்கே நாங்கள் இருந்தது மூன்றாவது மாடியில். இரண்டாவது மாடியில் எங்கள் அறைக்கு எதிர் கீழே இருந்த அறையில் சீனிவாசன் என்று ஒரு பிராமனர் தனியாக வசித்து வந்தார் (என் பெயரே தான்...!!!). அவர் பிராயம் சுமார் 35-ல் இருந்து 40 இருக்கும். பிரம்மச்சாரி, வங்கி ஊழியர். அறையில் தொலைக்காட்சி பெட்டி இருக்கும். அவர் அறையில் எப்பொழுது இருந்தாலும் அந்த தொலைக்காட்சி தன் பணியை செய்துகொண்டே இருக்கும். சமையலும் அவரே தான் (எங்களுக்கு ஒரு நாள் சமைத்துப் போடுவதாக கூறினார்). நாங்கள் ஒரே கட்டிடம் என்றாலும் அவர் அறைக்கு அவ்வளவாக போனது கிடையாது. அதுவும், அவர் என் Room Mate-ன் நன்பர், நான் அவ்வளவாக பேசியது கூட கிடையாது.
பின், நான் சென்னையில் வேலை கிடைத்து மாற்றலாகி வந்துவிட்டேன். ஒரு நாள் பெங்களூர்வாசிகளிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது, "உனக்குத் தெரியுமா? சீனிவாசன் இறந்து விட்டார்..." என்று கூறினர். எனக்கு நம்ப முடியாத வேதனையைத் தந்தது. பின் நடந்தது என்ன என்று கேட்ட பொழுது அவர்கள் சொன்னது:
தினமும் காலையில் 6 மணிக்கு எழுந்திருக்கும் அவர், அறையில் தொலைக்காட்சியை அலற விட்டு தன் வேலையை ஆரம்பிப்பார். அவர் ஒரு நாள் (அது தான் அவர் கடைசி நாள்) காலையில் எழுந்து தொலைக்காட்சியை அலற விட்டு, தன் அறைக் கதவை பாதி திறந்த நிலையில் விட்டிருக்கிறார். குளியலறையில் வாளியில் தண்ணீர் நிரம்பிக்கொண்டிருக்கிறது. அப்பொழுது குளியலறையை விட்டு வெளியே வந்திருக்கிறார். அப்பொழுது கால் வழுக்கி அவர் நெற்றி அந்த அறையில் இருந்த இரும்புக் கட்டிலின் மூலையில் அடிப்பட்டிருக்கிறது. அந்த அதிர்ச்சியில் வலிப்பும் வந்திருக்கிறது. (முன்பே அவருக்கு வலிப்பு நோய் இருக்கிறதா என்று தெரியவில்லை). தொலைக்காட்சிப் பெட்டியின் சத்தத்தினால் இவையாவும் வெளியில் கேட்கவில்லை. சற்று நேரத்திற்கெல்லாம் உயிர் பிரிந்திருக்கிறது.
இவையாவும் அந்த கட்டிடத்தில் இருந்த யாருக்கும் தெரியவில்லை. அவர் அலுவலகத்திற்கு எப்பொழுதும் விடுப்பு எடுப்பதில்லை. அப்படியே அதிசயமாக எடுத்தாலும், அலுவலகத்திற்கு தெரியப்படுத்துவார். ஆனால், அன்று அவர் அலுவலகத்திற்கு செல்லவில்லையாதலால் வங்கியில் இருந்து ஒருவர் வந்து பார்த்துச் செல்ல வந்திருந்தார். அவர் தாம் சீனிவாசன் இறந்திருப்பதை கண்டறிந்தார். காலையின் இருந்து 2 - 3 முறை தண்ணீர் தொட்டிக்கு மோட்டார் மூலம் நீர் இரைத்திருக்கிறார்கள். அதன் காரணம் அப்பொழுதுதான் அவர்களுக்கு விளங்கிற்று.
அவருக்கு ஒரே ஒரு சகோதரர் என்றும் அவர் திருச்சியில் இருப்பதாகவும் தெரியவந்தது. (அவர் இந்த செய்தியை எந்த அதிர்ச்சியும் காட்டாமல் இருந்தது ஆச்சரியம்). அவர் வந்து கையெழுத்து போட்டால் தான் பிணத்தை (காலை வரை சீனிவாசனாக இருந்தவர்) கொடுப்பதாக கூறினார்கள். பின்னர் அவர் வந்து சீனிவாசனை பெற்றுக் கொண்டு சென்றார். இறக்கும் பொழுது தன் உயிர் காப்பதற்கு என்ன என்ன முயற்சி செய்தாரோ...???
ஒரே கட்டிடத்தில் இருந்தவர், இறந்தது கூடத் தெரியாமல் மற்றவர்கள் இருந்திருக்கிறார்கள் என்று நினைத்தால் சற்றே கலக்கமாகத்தான் இருக்கிறது. இப்பொழுது சென்னையில் நான் இருக்கும் அடுக்ககத்தில் கூட இப்படித்தான் இருக்கிறது. எப்பொழுதும் எல்லா வீட்டுக் கதவுகளும் சாத்தியே இருக்கும். அடுத்த வீட்டில் (flat-ல்) என்ன நடக்கிறது என்று கூடத்தெரியாமல் இருக்கிறோம். இதையெல்லாம் பார்க்கும் பொழுது சிறு வயதில், தொலைக்காட்சி பெட்டி அவ்வளவு பரவலாக இல்லாத பொழுது எங்களுக்கு தெருவில் மற்ற சிறுவர்களுடன் மாலையில் விளையாடுவதும், எங்கள் தெருவில் இருக்கும் வீடுகளில் இருப்பவர்கள் வெளியில் அமர்ந்து பேசுவதும் தான் நியாபகத்துக்கு வருகிறது. மீண்டும் அந்த நாள் வந்தால் தேவலை...


Tuesday, March 15, 2005

NRI மனைவி...




நான் சில சமயங்களில் பொழுதுபோக்கிற்காக யாஹூ-வில் (Yahoo) மின்னரட்டை அடிப்பதுண்டு. அப்பொழுது நான் அரட்டை அடித்தவர்களில் சிலர் இந்தியாவைச் சேர்ந்தவர்களில் என் தோழி ஒருத்தியும் உண்டு. அவள் கூற்றுப்படி அவர்களில் பெரும்பாலும் House wife-ஆக இருப்பவர்கள். பெரும்பாலும் என்பதை விட, அனைவரும் என்பது சரியாக இருக்கும். ஆனால், அவர்கள் நிச்சயம் கல்லூரி படிப்பு படித்தவர்களாகவும் இருப்பர்.

பணம் இன்றைய வாழ்க்கையில் இன்றியமையாததாகிவிட்டது. தகவல் தொழில் நுட்பத் துறையின் வளர்ச்சியால் இன்று NRI-களின் எண்ணிக்கை பெருகிவிட்டது. மேலை நாட்டு கலாச்சாரம், சுதந்திரம் மற்றும் முக்கியமாக சம்பளம் ஆகியவற்றின் தாக்கத்தினால் இந்தியாவிற்கு திரும்புகிறவர்களும் குறைவு. வெளிநாட்டில் உள்ள இந்திய மென்பொருள் வல்லுனர்கள் பலர் இருக்கின்றனர். அவர்கள் அங்கு சென்று தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் வாழ்க்கை விசித்திரமானது. இங்கு இருந்ததைப் போல வாழ முடியாது. பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் யார் என்பதே தெரியாது. அவர்களை பார்த்தார்களா என்பதும் தெரியாது. இருந்தால் அங்குள்ள இந்தியர்கள் ஒரு கூட்டமாக இருக்கலாம். இந்தியாவில் இருக்கும் தங்கள் குடும்பத்திற்காக பலவற்றை தியாகம் செய்கின்றனர். (Of course, அவர்கள் வாழ்க்கையை நான் வாழாததால் இங்கு நான் எழுதியிருப்பவை தவறாகவோ அல்லது பொய்யாகவோ தோன்றலாம்...).

அடுத்து, திருமணம் என்று வரும்பொழுது அவர்கள் போடும் நிபந்தனைகள் தான் விசித்திரங்களுக்குள்ளாகிறது. தனக்கு இணையாக தங்கள் better half-ம் இருக்கவேண்டும் என எண்ணுகின்றனர். அதாவது இவர் ஒரு engineer-ஆக இருந்தால் அவர் மனைவியும் engineer-ஆகவோ அல்லது அதற்கு இணையாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். இது தவறில்லை தான். ஆனால், உதாரணத்திற்கு மனைவி ஒரு B.E. அல்லது MCA என்று வைத்துக் கொள்வோம். அங்கே செல்லும் அவர்கள் வேலைக்குச் செல்வார்களா? இந்த நிலையில், அவர்கள் படித்தது விழலுக்கு இறைத்த நீராகத்தானே போகிறது. அதற்காக பெண்கள் பட்ட மேற்படிப்பு படிக்க வேண்டாம் என்று கூறவில்லை. ஆனால், இவர்கள் படிப்பும், திறமையும் வீணாகத்தானே போகிறது. அப்படியானால், இங்கிருந்து வெளிநாட்டிற்கு மருமகளாகப் போவதற்கு B.E.-யும், M.C.A-வும் ஒரு தகுதியா (qualification) என்ன?

இதற்கு யாரையும் குற்றம் சொல்ல முடியாது. பெற்றோர்கள் தங்கள் மகள் வாழ்க்கை நல்லபடியாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்கு ஏற்ற இடம் அமெரிக்கா போன்ற வெளிநாடுதான் சிறந்தது என நம்புகிறார்கள். அல்லது, ஒருவேளை இப்படி இருக்கலாமோ? அமெரிக்கா போன்ற நாடுகளில் வாழ்க்கை நடத்துவது மிகவும் costly-ஆனது. அதனால் தானோ என்னவோ, அங்கு சென்றதும் இந்தியப் பெண்னை திருமணம் புரிகின்றனரோ? யாமரியோம் பராபரமே...


Friday, February 18, 2005

Formals கலாச்சாரம்...




வேலைகளில் வகைகள் உண்டு. Blue Collar Job, White Collar Job இப்படி. தகவல் தொழில் நுட்பத்துறை அல்லது மற்ற White Collar job செய்யும் வேலை இடங்களில், வேலை செய்பவர்களை நாம் பெரும்பாலும் formals உடையில் பார்க்கலாம். Formals உடை என்றால் கால்சட்டை (trousers), முழுக்கை சட்டை அல்லது அரைக்கை சட்டை, ஷூ, மற்றும் டை ஆகியவை அணிந்து கொண்டு வரவேண்டும். இதில் டை அணிவது பெரும்பாலும் தேவையில்லை. சில நிறுவனங்களில் இது கட்டாயமாக்கப்படுகிறது. அதாவது தினமும் இத்தகைய உடையில் தான் வரவேண்டும். இத்தகைய நிறுவனங்களில் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் இதற்கு விதிவிலக்கு, சில நிறுவனங்களில் இந்த விதிவிலக்குக்கும் விதிவிலக்கு. அதாவது, எல்லா நாட்களிலும் formals உடையில் வரவேண்டும்.

இந்தியா போன்ற பூமத்திய ரேகை செல்லும் நாட்டில் (அதுதாங்க உஷ்ணம் அதிகம் உள்ள) இது தேவையா என்பது என் கேள்வி? மதம் எவ்வாறு மக்கள் வாழும் சூழ்நிலைகளைப் பொருத்து உருவானதோ, அதேபோல உடை கலாச்சாரமும் மக்கள் வாழும் சூழ்நிலைகளைப் பொருத்தே வளர்ந்தது. உதாரணமாக, நம் நாட்டில் நாம் வேட்டிக் கட்டுகிறோம் என்றால் அதற்கு காரணம் உண்டு. வேட்டி பெரும்பாலும் பருத்தியிலிருந்து நெய்யப்படுகிறது. இது நம் நாட்டின் வெப்பத்திற்கு ஏற்றது. அதே சமயம், இங்கிலாந்தை எடுத்துக் கொண்டால், அங்கு குளிர் அதிகம் அதனால் அவர்கள் அணியும் உடையே வேறுபாடானது. இதை விளக்கமாக பார்ப்போம்.

பூமத்திய ரேகை செல்லும் நாடுகளைத் தவிற மற்ற நாடுகள் பெரும்பாலும் குளிர் பிரதேசம். அவைகளில் இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா (இங்கு குளிரும், வெய்யிலும் மாறி மாறி இருக்கும்), பிரான்சு, ஜெர்மனி, நியூசிலாந்து, கனடா (இங்கு -25 டிகிரி செல்சியஸ் கூட இருக்குமாம்) போன்றவைகளை எடுத்துக் கொள்வோம். இவை பெரும்பாலும் அதிக குளிர் உள்ள பிரதேசங்கள். இந்த பிரதேசங்களில் உள்ள மக்கள் வெளியே செல்லும் பொழுது தங்கள் உடம்பில் குளிர் காற்று புகாதவாறு பார்த்துக் கொள்வார்கள். முழுக்கைச்சட்டை அணியும் பொழுது கையில் cuff இருக்கும். அது குளிர் காற்று கைகளின் உள்ளே புகாமல் இருப்பதற்கு. கழுத்தில் டை அணிந்திருப்பது உடம்பில் குளிர் காற்று புகாமல் இருப்பதற்கு. காலில் ஷூ அணிந்திருப்பது பாதங்களின் நுனிகளில் எழும்புகள் இல்லாததால் அவைகள் கடும் குளிரில் கடுமையாக பாதிக்கப்படாமல் இருப்பதற்காக. உடம்பில் over coat அணிவதும் குளிருக்காகத்தான். குளிருக்காக பணியில் (வேலையில்) இருக்கும் போது sweater அணிய முடியாது. அதனால் coat அணிகின்றனர்.

ஆனால், நாம் என்ன செய்கிறோம்! அவர்கள் அணியும் உடை தான் decency எனக் கருதி அதை அப்படியே நகல் எடுக்கிறோம் (அதாங்க, காப்பி). நம் ஊரில் சாக்ஸ் துர்நாற்றத்தை, செத்துப் போன எலிக்கு உவமையாகக் கூறுவது நன்றாக அறிந்திருப்பீர்கள். சென்னை போன்ற சூடான நகரங்களை நினைத்துப் பாருங்கள். மேற்கத்திய நாடுகளைப் போல உடை அணிந்து இருப்பது எவ்வளவு கடினம் (டை, coat ஆகியவை இல்லாதிருப்பினும்). அதற்காக வேட்டி சட்டை அணிய வேண்டும் எனக் கூறவில்லை. அது ஏன் கட்டாயமாக்கப்படுகிறது என்று தான் கேட்கிறேன். அலுவலகத்திற்கு பேருந்து ஏரும் வரையில் தான் நாம் ராஜா. பேருந்திலிருந்து இறங்கி அலுவலகத்திற்குள் நாம் நுழையும் பொழுது இந்த உடையும், வெய்யில் கொடுமையும் சேர்ந்து நம்மை என்ன பாடு படுத்திவிடுகிறது?

நம்ம ஊரில் அயல் நாட்டு மோகம் நம்மை எப்படி எல்லாம் ஆட்டுவிக்கிறது? நான் முக்கியமாக சொல்வது உடையை விட இந்த ஷூக்கள் அணிவது தான். அதுவும் அஹிம்சையை போதிக்கும் நாடு என்ற போர்வையில் எத்தனை மிருகங்களை இந்த ஷூக்களுக்காக கொல்கிறோம்!!! இந்த வெய்யிலில் நாம் ஷூக்களை அணிவதால் ஏற்படும் கொடுமை இருக்கிறதே...என்ன பாதங்கள் மிருதுவாக இருக்கும். அதற்காக துர்நாற்றத்துடன் அலைய முடியுமா என்ன? சிந்திப்போம்...


Wednesday, February 16, 2005

ஆஸ்திரேலியாவில்...




சென்ற வாரம் (ஜனவரி மாதம், 2005-ல்) நான் என் நன்பன் திரு. Austin Power ஹாரிஸ்-உடன் சென்னையிலிருந்து பெங்களூருக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தேன். சென்னை ரயிலில் ஒரு நடுத்தர வயது பெண்மனி அமர்ந்திருந்தார். நான் மேலே என்னுடைய இருக்கையில் உறங்கலாம் என படுத்திருந்தேன். Lower Berth-ல் ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார். அந்த பெண்மனி அந்த பெரியவரிடம் ஆங்கிலத்தில் பேச்சுக் கொடுத்திருந்தார். அப்பொழுது அந்த பெண்மனி அந்த பெரியவரிடம் ஒரு கேள்வி கேட்டார். "உங்களுடைய பிரதமர் திரு.மண்மோகன் சிங் தானே?" என்று கேட்டார். இதை கேட்ட எனக்கு (அவர்கள் ஒரு இந்தியப் பெண்மனி போலத்தான் தெரிந்தார்...) ஆச்சரியம் கலந்த பார்வையில் (இங்கு எனக்கு சற்று அதிர்ச்சியாக கூட இருந்தது. என்ன தான் வெளிநாடுவாழ் இந்தியராக இருந்தாலும், தன் தாய் நாட்டின் பிரதமர் யார் என்றுகூடவா அறிந்திருக்க மாட்டார்?), "நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?" என கேட்டேன். அவர் தான் ஆஸ்திரேலியாவில் இருந்து தாய் வீட்டிற்கு வந்ததாகவும், சென்னையில் தன் தாய் தந்தையரை பார்த்து, தற்பொழுது பெங்களூரில் உள்ள தன் சகோதரி வீட்டிற்கு செல்வதாக கூரினார். ரயில் புரப்பட்டதும், அவர் கணவரும் வந்து சேர அவர்களிடம் பேச்சு கொடுத்ததில் சில துளிகள். நாங்களாக பேச்சு கொடுக்கவில்லை என்றாலும், அவர்களாகவாவது எங்களிடம் பேச்சு கொடுப்பார்கள். அதற்கான காரணமும் கீழ்கண்ட துளிகளில் அறிந்துகொள்ளளாம்...

1. ஆஸ்திரேலியாவில் ஒருவர் உடம்பு சரியில்லை என்று மருத்துவரிடம் சென்றால், மருத்துவர் அவர் உடம்பை சோதித்து, மருந்துச் சீட்டு எழுதித் தருவார். அவர் மருத்துவ பரிசோதனைக்கும், மருந்துகளுக்கும் சம்பந்தப்பட்டவர் பணம் கட்டத் தேவையில்லை. அரசாங்கமே அவருக்கு பணம் கட்டிவிடும்.

2. அங்கு வேலை இல்லாதவர்களை அரசாங்கம் கவனித்துக் கொள்ளும். அவர்கள் செய்யும் செலவுகளில் அரசும் பங்கு கொள்ளும். உதாரணமாக, வேலை இல்லாதவர்கள் மின்சார கட்டணம் பாதி கட்டினால் போதும். மீதியை அரசாங்கம் கட்டிவிடும். என்ன ரொம்ப ஆச்சரியமாகவும், பொறாமையாகவும் இருக்கிறதா? பின்வரும் துளிகளில் இதையும் பார்க்கலாம்.

3. இப்படி எல்லாவற்றிற்கும் அரசாங்கமே பணம் கட்டிவிடுவது எப்படி சாத்தியம் ஆகிறது? ஆகும், அங்குள்ளவர்கள் எல்லோரும் முறையாக வரிகளை கட்டிவிடுவதால். அங்கு வரி ஏய்ப்பு என்பது இல்லை மற்றும் முடியாது. மேலும், அங்கு பணம் சம்பாதிப்பவர்கள் பெரிய அளவில் வரி கட்டவேண்டும். இப்படி கட்டும் வரிப்பணம் தான் மேற்கூரியவாறு செலவழிக்கப் படுகிறது. இதை இரண்டு கோணத்தில் பார்க்கலாம். ஒன்று, இந்த வரிப்பணத்தை நல்ல வழிகளில் உபயோகிக்கிறார்கள். இதை ஆங்கிலத்தில் Social Security என்று சொல்வார்கள். அதாவது ஒவ்வொரு குடிமகனுக்கும் வாழ வழியுண்டு என்பதை சொல்வது. இரண்டாவது அரசாங்கமே இலவசங்களையும், மாணியங்களையும் ஊக்குவிதல் ஆகிறது. (நம் நாடு பல பிரச்சினைகளை சந்திப்பதற்கு இந்த மாணியங்களும் ஒரு காரணம்). "பசிக்கிறவனுக்கு மீனைக் கொடுப்பதை விட மீன் பிடிக்கக் கற்றுக்கொடு" என்பது ஒரு சீனப் பழமொழி.

4. அங்குள்ள இளைஞர்கள் பெரும்பாலும் 12-13 வயதில் (சிறுவர்கள்?) வீட்டை விட்டு வெளியேறி விடுகின்றனர். பெற்றோர்களாலும் அதை தடுக்க முடியாது. மீறி பெற்றோர்கள் தடுக்க முயன்றால் அந்த இளைஞர்கள் காவல் துறையில் புகார் கொடுக்க முடியும். சட்டம் இந்த இளைஞர்கள் பக்கம் தான்.

5. இப்படி செல்லும் இளைஞர்கள் பெரும்பாலும் வேலை செய்வதில்லை. அப்பொழுது பணம்?

6. அரசாங்கமே மக்கள் புகை, மது மற்றும் போதை ஏற்றிக் கொள்ள தனி இடங்களை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. இது அவர்களை ஊக்கப் படுத்துவதைப் போல இருக்கிறது. மேலும் அவர்கள் வெளியில் எங்காவது விழுந்து கிடந்தால் ஆம்புலன்ஸ் கொண்டு வந்து அவர்களுக்கு சிகிச்சையும் கொடுக்கப்படுகிறது.

7. அங்கு இருப்பவர்கள் பெரும்பாலும் பத்தாவது வகுப்பை தாண்டுவது இல்லை. எங்களிடம் பேசிய அந்த பெண்மனியின் கணவர் பத்தாவது படித்தவர். வேலைக்கும் அவர்களாகவே விருப்பப்பட்டு சென்றால் தான் உண்டு. ஆக அவர்களுக்கு பணம் தேவைப்படும். அதற்காக அவர்களில் "சிலர்" பகுதி நேர திருடர்களாகவும் இருக்கிறார்கள். (இது அவர்கள் சொன்னது தான்!). அவர்களுடைய வீடு ஒரு முறை கொள்ளை அடிக்கப்பட்டிருக்கிறது. கொள்ளை அடித்தது யார் என்றும் அப்பகுதி காவல்துறையினருக்கும் (இந்தியா?) தெரியுமாம்!! இப்படிப் பட்ட கொள்ளையில் இருந்து தற்காத்துக்கொள்ள ஒரெ வழி காப்பீடு. ஆனால் அங்கு காப்பீடு செய்வது பெரும் பாடு. பணம் அதிகமாக கட்ட வேண்டும். அதனால் அவர்கள் இன்னும் கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்கள் திரும்ப கிடைக்கவில்ல.

8. இப்படி நாங்கள் அவர்களிடம் பேசுவதும் அவர்களுக்கு ஆச்சரியம். காரணம் அங்கு ரயிலிலோ அல்லது பயனத்திலோ அவர்கள் வேறு யாரிடமும் பேசுவது கிடையாது. (அதாவது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடுவது கிடையாது என்றும் எடுத்துக் கொள்ளலாம்...). அந்த தம்பதியினருக்கு நாங்கள் அவர்களிடம் பேசியது மிக்க மகிழ்ச்சியாக இருந்ததாக கூறினர்.

9. ஆனால், அவர்கள் கடைசியாக ஒன்று கூரியது தான் உதைக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தங்கள் குழந்தை வளர விரும்பாததால் அவர்கள் இன்னும் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என்று கூறினார்கள். அது அவர்கள் சொந்த முடிவு. ஆனால், அதன் காரணம் தான்...

இப்படியாக நாங்கள் பேசியது இரவு 12 மணிவரை சென்றது. பிறகு அனைவரும் தூங்கசென்று விட்டோ ம். ஆக, ஒரு நல்ல ரயில் சினேகிதம் கிடைத்தது. அவர்கள் என் நன்பனிடம் தங்கள் முகவரியை கொடுத்து அடுத்த முறை ஆஸ்திரேலியா வந்தால் அவர்கள் வீட்டிற்கு வரும்படியும் அழைத்தார்கள். (ஹாரிஸ் ஒருமுரை ஆஸ்திரேலியா சென்று வந்துள்ளான்) நான் எழுதிக்கொண்டிருக்கும் இப்பொழுது ஹாரிஸ் ஆஸ்திரேலியாவில் இருக்கிறான். அவர்களை சென்று பார்த்தானா எனத் தெரியவில்லை...


Tuesday, November 30, 2004

திரு. கலாமிற்கு ஒரு கடிதம்.




மாண்புமிகு மூத்த குடிமகனாருக்கு,
இந்த தேசத்தின் கடைக்குடிமகன் மணதில் வேதனை தாங்கி விழையும் மடல்.
இந்த கடிதத்தை நீங்கள் படிப்பீர்களா அல்லது உங்கள் காரியதரிசி மட்டுமே படிப்பார்களா என தெரியாது. ஆனாலும் ஒரு நம்பிக்கையுடன் தான் வரைகிறேன்.
நாங்கள் தமிழ் நாட்டில் உள்ள ஒரு சிரு நகரமான வேலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரை சேர்ந்தவர்கள். எனக்குத் தெரிந்த சகோதரி பருகூரில் உள்ள ஒரு கல்லூரில் படித்து வந்தாள் (இறந்த காலம்!!!). அவள் பெயர் சங்கீதா. அவள் குடும்பத்தில் அவள் மட்டுமே படிக்கும் பெண். அவள் குடும்பம் மிகவும் ஏழ்மையானது. அவள் கல்லூரியில் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு ரத்ததான முகாம் நடந்தது. அந்த முகாமில் ரத்தம் எடித்தது கிருட்டினகிரி அரசு மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள். சமுதாயத்திற்கு தன்னால் ஆன ஒரு சிரு உதவியாகத்தான் அவளும் அந்த ரத்ததான முகாமில் தன் உடம்பில் இருந்து ரத்தம் கொடுத்தாள். ரத்தம் எடுத்தவர்கள் அவர்களுடைய பக்கம் பாதுகாப்பிற்காக எல்லா கோப்புகளிலும் கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள். ரத்தம் கொடுக்கும் பொழுது அவளுக்கு குறைந்த ரத்த அழுத்தம் (Low Blood Pressure) இருந்திருக்கிறது. ரத்தம் கொடுக்கும் பொழுது எடுக்க வேண்டிய சில சோதனைகளை செய்தார்களா என தெரியவில்லை. ஆனால் அவள் தனக்கு குறைந்த ரத்த அழுத்தம் இருப்பதாக கூறியிருக்கிறாள்.
பிறகு அவள் மிகவும் சோர்வாகவே கானப்பட்டாள். இது நடந்து ஒரு மாதத்திற்கு பிறகு, அதாவது சென்ற வாரத்தில் ஒரு முறை மயங்கி விழுந்தாள். அவளை மருத்துவமைக்கு கொண்டு சென்ற பொழுது, அவள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக கூறினார்கள். வேறு வழியில்லாமல், அவர்களின் ஆபத்பாந்தவனான அரசு மருத்துவமைக்கு சென்று சேர்த்தநர். அதுவும் எந்த அரசு மருத்துவமனையில் என்றால், எல்லா வ்சதிகளும், எல்லா சாதனங்களும் இருப்பதாக கூறிக்கொள்ளும் சென்னை அரசு மருத்துவமனையில். அங்கு சென்று சேர்த்ததும் அவளை ஒரு அவசர நோயாளியைப் போல பாவிக்காமல் எதோ ஒரு சாதாரன நோயாளியைப் போல பாவித்தனர். நான் குறிப்பிடுவது அவர்கள் கொடுத்த மரியாதையை அல்ல. அவர்கள் அதை கொடுக்கமாட்டார்கள் என்பது தெரிந்ததால் அதை எதிர்பார்ப்பது முட்டாள்தனம். ஆனால் அங்கே ஒரு உயிர் துடிப்பதை யாரும் கண்டுகொள்வதாக தெரியவில்லை. அவர்களின் மனம் மருத்துப்போன ஒன்று. உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். தன் மகளைப் பார்க்க வேண்டும் என்று சங்கீதாவின் தாயார் கேட்டார்கள். ஆனால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. காரணம் என்னவென்றால் அவசர சிகிச்சை பிரிவில் (ICU) உள்ள நோயாளிகளை பார்ப்பது நோயாளிகளுக்கு மிகுந்த சிரமம் கொடுக்கும் என்பதால். அவர்கள் இந்த காரணத்தை சொல்லித்தான் சங்கீதாவின் தாயாருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அங்கே கண்ட காட்சி...அங்கு இருக்கும் Ward Boy மற்றும் செவிலியர்கள் அந்த நோயாளிகள் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டு போடும் கூச்சலினால் நோயாளிகளுக்கு உருவாகும் சிரமம் சங்கீதாவின் தாயார் சென்று பார்ப்பதினால் உருவாகாது என்பது என் தாழ்மையான கருத்து.
மேலும் அந்த பெண்ணுக்கு CT Scan எடுக்க 4 நாட்கள் ஆனது. அதற்கு காரணமாக சொல்லப்பட்டது அங்குள்ள கணினி Busy-ஆக இருந்ததினால். மேலும் என்ன நோய் என்று கேட்டதற்கு அவர்கள் சொல்ல பதில், "அது உங்களுக்கு புரியாது. ஆனால் அது ஒரு கொடுமையான நோய்" என்று. படிக்காதவர்களான அவர்கள் என்ன சொல்ல போகிறார்கள் என்ற இருமாப்பு. ஆனால் கடைசி வரை அந்த பெண்ணுக்கு என்ன நோய் என்பதே தெரியவில்லை. இப்பொழுதும் தான். சங்கீதாவின் சகோதரன் அங்கு சென்ற பிறகு அவன் என்ன நடக்கிறது என்று கேட்கவும் (அதுவும் அவன் ஆங்கிலத்தில் சத்தம் போட்டதும்) அவர்கள் அவளை ஓரு ரத்தப் பரிசோதனை செய்யச் சொன்னார்கள். ஆனால் அவையாயும் மிக தாமதமான செயல் என்பது கடந்த சனிக்கிழமை மதியம் தான் உணர முடிந்தது. அவள் உயிர் பிரிந்தது. பிறகு அவர்களின் அடுத்த போராட்டம் தொடங்கியது. அந்த போராட்டம் சங்கீதாவின் உடலை பெருவதற்கு. அவள் உடலை பெருவதற்கு அவர்கள் பட்டபாடு சுமார் ஆறு அரை மணி நேரம். பிறகு எல்லா சம்பிரதாயங்களையும் முடித்த பிறகு (அதாவது லஞ்சம்) ஒருவழியாக திருப்பத்தூருக்கு வந்து அவள் அடக்கம் "மட்டுமே" நல்ல விதமாக முடிந்தது.
சங்கீதா பேசிய கடைசி வார்த்தைகள் என்ன தெரியுமா? "பாஸ்கர் அண்ணா வந்தா என்னை இந்த ஆஸ்பத்திரியில் இருந்து வேறு ஒரு நல்ல ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டு போகச் சொல்லுங்க. எனக்கு பயமா இருக்கு". ஆனால் சென்னையில் உள்ள ஒரு மிகப் பெரிய மருத்துவமையில் என்ன நடந்தது தெரியுமா? ரத்த சுதிகரிப்பு (Dialysis) செய்ய வந்த ஒரு நோயாளி, அங்குள்ள ஒரு ஊழியரின் அஜாக்கிரத்தையினால் ரத்த குழாயினுள் ஒரு Air Bubble சென்று அந்த நோயாளி இறந்து விட்டார். ஆனால் அந்த மருத்துவமனை நிர்வாகம் அதை மறைத்துவிட்டது. இது எனக்கு அந்த மருத்துவமனை ஊழியர் ஒருவர் சொன்னது.
என் கேள்வி ! இந்த தேசத்தின் குடிமகன்/ள் ஒரு நற்காரியம் செய்ய துனிவது ஒரு பெருங்குற்றமா? மனித ரத்தம் என்பது உருவாக்க முடியாதது. அதனால் தான் அதற்கு இவ்வளவு விளம்பரங்கள் செய்து ரத்ததான முகாம் ஏற்பாடு செய்து ரத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் என் (எங்கள்) சந்தேகம் இந்த அரசாங்கங்கள் தங்களின் ரத்த தேவைக்காக மக்களிடம் பொய் சொல்கிறதா? என்பது தான். ஏன் என்றால் அந்த மருத்துவமையில், மருத்துவர்கள் இன்னொரு மருத்துவர்கள் செய்யும் தவறை மறைக்கிறாகள். இது கண்கூடாக தெரிகிறது. ஒரு நோயாளிகளின் நோயையோ அல்லது எந்த நோயினால் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை விளக்க அவர்கள் கடமைப்பட்டுள்ளார்கள்.
இந்த இறப்பு சொல்லும் பாடம் என்னவென்றால், அன்று சங்கீதாவின் இறுதி ஊர்வலத்திற்கு வந்தவர்களிடம் (சுமார் 100 பேர்களிடம்) சொல்லப்பட்டது...ரத்த தானத்தை எதிர்த்து. இதை நாங்கள் ஒரு குழுவாக செய்ய முடிவெடுத்துள்ளோம். காரணம் இந்த நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு சங்கீதா இருக்கிறாள் என்பதால். இந்த அரசாங்கம் என்ன தான் செய்ய முடியும். அந்த பெண்ணிற்கு கண்டிப்பாக நியாயம் கிடைக்காது என்பது தெரியும். ஏனென்றால் எங்களுக்கு நம்பிக்கையாய் இருந்த ஒரே தூணான நீதித்துரையின் மேல் எங்கள் நம்பிக்கை வேகமாக குரைகிறது. அதுவும் போபால் விஷவாயிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கே இப்பொழுதான் நிவாரணமாக கிடைத்திருக்கிறது. தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்பட்டதற்கு சமம். அட்டைபூச்சிகளாக ரத்தம் எடுத்த அந்த மருத்துவமனிகுழுயும் அவர்கள் பக்க நியாயத்திற்கு வேண்டியவனவற்றை கையெழுத்தாக வாங்கிவிட்டர்கள். ஆக கடைசியாக எந்த பக்கமுன் அடி வாங்குவது இந்த நாட்டின் கடைக்குடிமகனான நாங்கள் தான் (எங்கள் நோக்கம் நல்லவையாக இருந்தாலும்!!!). எங்களுக்கு செல்ல வேறு நாதியில்லை. ஆதலால் உங்களிடம் சொல்கிறோம்.
இந்த ஒரு சங்கீதா இறந்தாலும் பரவாயில்லை. நாங்கள் அவள் விதி முடிந்துவிட்டதாகவே எங்களை நாங்கள் சமாதானப்டுத்தி கொள்கிறோம். ஆனால் இந்த தேசத்தில் உள்ள மற்ற சங்கீதாக்களை எப்படி காப்பாற்றப்போகிறோம்???
"காட்சி கெளியன் கடிஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்"

காட்சிக்கு எளிமையும், கடிஞ்சொல் கூறாத இனிய பண்பாடும் உடைய அரசைத்தான் உலகம் புகழும்.

ஆனால், எந்த தீமைக்குள்ளும் ஒரு நன்மை உண்டு என்பதைப்போல, இந்த நிகழ்ச்சி மற்ற சங்கீதாக்களை பற்றியும் எங்களை யோசிக்க வைத்தது. இந்த கடித்தத்தில் ஏதாவது எழுத்துப் பிழை இருந்தால் தயவு செய்து மன்னிக்கவும்.
பி.கு. இந்த கடிதத்தை தங்களுக்கு எழுதுவதற்கு காரணம், மற்றவற்கு இது பத்தோடு பதினொன்று தான்.
வாழ்க பாரதம்! வளர்க தமிழ்!!


Monday, August 30, 2004

LLR விண்ணப்பிக்க முயன்ற கதை(யல்ல நிஜம்...)






தேதி : 27/08/2004
நேரம் : காலை 11:15

இந்த கதையின் கதாநாயகன், அதாவது நானேதான்...வேலூரில் நண்பனின் திருமணத்தை நடத்தி (கொடுத்து!!!) விட்டு முன்னிரவு தூக்கம் இன்றி மிகவும் களைப்புடன் காலை உணவின்றி பேருந்தில் தொடர் பயனம் செய்து வாணியம்பாடியில் உள்ள RDO அலுவலகத்தை ஒரு வழியாக அடைகிறேன்.

நான் : (அங்குள்ள ஒருவரிடம்) சார், LLR apply பண்ணனும்.
நபர் 1 : வெளியே form வாங்கி fill-up பண்ணி வந்து கொடுங்க...

நான் வெளியே சென்று ஒரு கடையில் கேட்க, அவர் மற்றொரு கடையை காட்ட, நான் அங்கு செல்ல அங்கிருந்து இன்னொரு கடைக்கு வழி காண்பிக்கப்பட்டேன். அங்கு சென்று தேவையான பாரத்தை ஐந்து ரூபாய்க்கு வாங்கி அங்கேயே பூர்த்தி செய்து மீண்டும் உள்ளே வந்து கொடுக்கிறேன்.

நபர் 1 : இங்க கொடுக்காதே. அவரிடம் கொடு...

நான் அங்கிருந்து சென்று அவர் கண்பித்த நபரிடம் கொடுத்தேன். அவர் கேட்ட படி ரூபாய் முப்பது கொடுத்தேன். அதற்கான ரசீதையும் பெற்றுக்கொண்டேன்.

நான் : சார்! நான் என்ன செய்ய வேண்டும்.
நபர் 2 : அந்த பக்கம் போய் நில்லு. அவங்க கூப்பிடுவாங்க.

நான் அங்கிருந்த இருக்கையில் சென்று அமர என் அருகில் ஒரு கல்லூரி மாணவன் அமர்ந்தான். (அவன் வாணியம்பாடியில் இருந்து RDO அலுவலகம் வருவதற்கு வழி காட்டுமாறு நான் கேட்க அவன் தானும் RDO அலுவலகம் செல்வதாகவும் கூறினான். பின் இருவரும் அதே பேருந்தில் RDO அலுவலகம் வந்தோம்). அவன் இந்த முறை விரக்தியோடு என் அருகில் வந்து அமர்ந்தான்.

நான் : என்னங்க! என்னாச்சு?
அவன் : என்னுடைய Driving License-ஐ institute காரங்க தொலைச்சிட்டாங்க. அத வாங்க வந்தேன். அலைய விடுரானுங்க...

அப்பொழுது ஒருவன் (35 வயதுள்ள Office Boy) அவன் பேரை சொல்லி அழைக்க, முதல் அழைப்பிலேயே அவன் எழுந்து செல்கிறான். அவன் அழைத்தவனின் அருகில் செல்ல அவன் இரண்டாவதாக அவனை அழைக்கிறான். அவன் அங்கு சென்றதும்...

Office Boy : என்ன கூப்பிடுவது காதுல விழலையா? எத்தனை தரம் கத்தறது. License வேணுமா இல்லையா...? வந்து நில்லுடா...

அவன் அமைதியாக நிற்கிறான். அப்பொழுது என்னிடம் பணம் வாங்கியவன் மேலும் அங்கு நிற்ப்பவர்களிடம் வசூலிக்கிறார். அவர் ஒவ்வொருவரிடமும் எதாவது ஒன்று சொல்லி திட்டிக்கொண்டே அலுப்புடன் வாங்குகிறார். உதாரணமாக,

"நீ என்ன பண்ணாலும் தப்பிக்கவே முடியாது! 300 ரூபா கொடி (கையூட்டு அல்லது லஞ்சம்) கட்டாம எப்படி license வாங்குறேன்னு பாக்குறேன்."
"எங்களுக்கு என்ன வேற வேலை இல்லைன்னு நெனைச்சியா. இரு Inspector-ரிடம் சொல்றேன்"
ஒரு பெட்ரொல் பங்க்கில் வேலை செய்யும் இளைஞரிடம் "எதுக்கு இப்படி சில்லறையா கொண்டு வந்து என் உயிர வாங்குற?"

இப்படியாக இது ஒருபுரம் நடந்து கொண்டிருக்க, அந்த இண்ஸ்பெக்டர் சிலரை 8 போடச் சொல்லவும், 11 போட சொல்லவும் வெளியே செல்கிறார் (அட! 4 Wheeler-ங்க), மற்றும் சிலர் 7 1/2 போட வேண்டும். ஒரு மணிநேரம் செல்கிறது. நான் வந்த வேலை ஞாபகம் வர, என்ன இன்னும் நான் அழைக்கப்படவில்லையே என்று சந்தேகம் வர, மீண்டும் (வேறு வழி இன்றி) அந்த நபர் 2 (அதான் Mr.திட்டு) விடம் சென்று...

நான் : சார்! நான் LLR apply பண்ண வந்தேன். உங்களிடம் 30 ரூபாய் கட்டிட்டேன். நான் என்ன செய்ய...
Mr.திட்டு : (என் கையில் உள்ள பாரத்தை பார்த்து) இந்த form-ஐ அங்க கொடுக்காம நீயே வெச்சுக்கிட்டிருந்தா அவங்க எப்படி கூப்பிடுவாங்க. 11 மணியோட form வாங்குற time முடிஞ்சுடுச்சு. (அவர்தான் 11:15-க்கு நான் பணம் கொடுத்தப்ப வாங்கி ரசீது கொடுத்தார் என்பதை நினைவில் கொள்க...)
நான் : சார்! நீங்க எதுவுமே சொல்லல. நீங்க தான் என்ன wait பன்ன சொன்னீங்க...
Mr.திட்டு : (கோபம் வந்தவராய்) நீ பணம் கொடுத்த, நான் வாங்கிகிட்டு bill கொடுத்தேன். அவ்வளவு தான் என் வேலை. போய் நில்லு.
நான் கடுப்புடன் அங்கிருந்து நகர்ந்து என்ன செய்ய என்று யோசித்து கொண்டிருக்க, அங்கிருந்த இன்னொருவரிடம் சென்று எதற்கும் இன்னொரு முறை கேட்கலாம் என்று அவரிடம் சென்று...
நான் : சார்! (என்று ஆரம்பித்து நான் LLR விண்ணப்பிக்க வந்த கதையை சொல்லி முடிக்கிறேன்...)
அவர் : (என்னிடம் உள்ள luggage-களை பார்த்து) என்கிருந்து வரீங்க...
நான் : (கொஞ்சம் அனுதாப அலை இருக்கட்டும் என்று) பெங்களூரில் இருந்து வற்றேன் சார்.
அவர் : இல்ல. உங்க native எது?
நான் : திருப்பத்தூர்.
அவர் : திருப்பத்தூரில் எங்கே?
நான் : (நான், யார் என்னுடைய தெரு பேர் கேட்டாலும் "செங்குந்தர் தெரு" என்று சாதிப் பேர் சொல்லாமல் "பெரியவர் சன்முகனார் தெரு" என்று மற்றொரு பேர் சொல்லுவேன். இங்கு எனக்கு வேலை ஆகவேண்டும் என்பதால் எல்லோருக்கும் பரிச்சயமான) செங்குந்தர் தெரு.
அவர் : செங்குந்தர் தெருவில் எங்கே?
நான் : (என் வீட்டின் landmark சொல்ல)
அவர் : அதானெ! பார்த்த மாதிரி இருகேன்னு நெனச்சேன். இந்த form-ஐ fill-up பண்ணினதும் (ஒரு நபரை காட்டி) அவரிடம் கொடுக்க வேண்டும்.
நான் : சார்! நான் (Mr.திட்டு-வை குறிப்பால் உணர்த்தி) அவரிடம் போனபோது அவர் தான் என்னை இங்கே wait பண்ண சொன்னார். வேறு எதுவும் சொல்லலை...
அவர் : (தன் தலையில் மெல்ல அடித்து கொண்டு என்னிடம் மெதுவாக) அந்தாளிக்கு அறிவே இல்லை. இப்போ ஒன்னும் பண்ண முடியாதுப்பா.
நான் : ஐயையோ! சார் நான் பெங்களூர்ல work பன்றேன். இன்னைக்கு இதுக்காகவே leave apply பண்ணிட்டு வந்திருக்கேன் சார்.
அவர் : நீ ஒன்னு பண்ணு, Inspector வந்தா, 'சார் நான் 11 மணிக்கு முன்பே வந்து பணம் கட்டிட்டேன். உங்களிடம் கொடுக்கனும்கிறது தெரியாம நான் இவ்வளவு நேரம் வெளியே நின்னுகிட்டிருந்தேன். இதுக்காகவே leave apply பண்ணிட்டு பெங்களூர்ல இருந்து வந்திருக்கேன் '-னு சொல்லு. என்ன சொல்லுறார்னு பாப்போம்.
நான் அடுத்து அரை மணிநேரம் காத்திருக்கையில், அந்த கல்லூரி மாணவன் வந்தான்.
நான் : உன்னுடையது என்னச்சுங்க?
அவன் : ம்ம்! license கிடைச்சிடும். இன்னொரு நாள் வர சொல்லியிருக்கானுங்க. அப்பா எத்தனை நாள் அலைஞ்சிருக்கேன்.
அடுத்த அரைமணிநேரம் கழித்து inspector வருகிறார். நேரம் 1:30 மணி
நான் : சார்! நான் LLR apply பண்ண வந்தேன். பணம் கட்டிட்டேன். ஆனா உங்ககிட்ட கொடுக்கனும்னு தெரியலை. நான்பாட்டிக்கு வெளிய wait பண்ணிட்டுருந்கேன் சார்.
Inspector : (சற்று சத்தமாக) பரவாயில்லை. போய் திங்கட்கிழமை வா.
நான் : சார்! நான் பெங்களூர்ல இருந்து வற்றேன். Office-க்கு leave apply பண்ணிட்டு வந்திருக்கேன்.
Inspector : (இன்னும் சற்று சத்தமாக) அப்ப monday-யும் leave apply பண்ணிட்டு வா.
நான் அவரை பின் தொடர்ந்து சென்று அவர் அறை வாசலில் நிற்கிறேன், வந்த வேலை எப்படியாவது நடக்க வேண்டும் என்று...Inspector தன் அறையில் சென்று அவர் இருக்கையில் அமர்ந்து நான் இன்னும் நின்றுக்கொண்டிருப்பதை பார்தது பயங்கர கோபத்துடன்...
"Don't waste (இப்பொழுது நான் திரும்பி நடக்க ஆரம்பித்தேன்) my time and your time..."
அவர் குரல் எனக்கு மெல்ல கறைகிரது...

சரி! இப்படி LLR விண்ணப்பிபதற்கு முடியாமல் போனதற்கு காரணங்கள் என்ன:

1. முதல் முக்கியமான காரணம், இந்த கதையின் நாயகன், அதாவது நான், பொருப்பின்றி தாமதமாக சென்றது. இதனால் என்னால் உரிமையோடு அவர்களிடம் கேட்க முடியவில்லை. நாம் நம் பாக்கம் தவறில்லை என்றால் மட்டுமே நம் உரிமையை உரிமையோடு கேட்கலாம். நான் தாமதமாக சென்றதால் அவர்கள் சொல்லுவதர்க்கெல்லம் தலை ஆட்டிக்கொண்டு இருப்பதாக ஆயிற்று.

2. முதலில் அங்கு செல்பவற்க்கு என்ன என்ன process உள்ளது என்று தெரியாது. ஆனால் அதற்கான வழிமுறைகள் எதுவும் அங்கே இல்லை. அதனால் ஒவ்வொன்றிக்கும் யாரையாவது எதிர்பார்க்க வேண்டும். அதற்காக பெரும்பாலும் எனக்கு சொல்லப்படும் அறிவுரை, "கொஞ்சம் செலவு ஆனாலும், Driving Institute மூலம் செல்!" என்பது. அவர்களுக்கு எல்லா வழிகளும் தெரியும் என்பதாலும் எங்கெங்கு கையூட்டு தர வேண்டும் என்று தெரிவதாலும், அவர்கள் மூலம் செல்வது உத்தமமாக "ஆக்கப்பட்டது". இது நம்மை மறைமுகமாக கையூட்டு கொடுக்க வைக்கிறது. இது எப்படி உண்மை என்றால் பெரும்பாலும் Driving Institute மூலம் செல்லாதவற்கள் இப்படி போன்ற திட்டுக்கள் வாங்குகிறார்கள்.

3. இது போன்ற அரசு அலுவலகங்களில் மக்களிடம் நேரடியாக தொடர்புகொள்கிறவர்கள் (உதா., Mr.திட்டு) தான் அந்த அலுவலகங்களுடைய முகங்கள். அகத்தின் அழகு எனக்கு அவருடைய முகத்தில் தெரிந்துவிட்டது. இந்த மனிதர் ஒருவரை எல்லோர் எதிரிலும் "நீ கட்டாயம் லஞ்சம் கொடுக்க வேண்டும்" என்று மிரட்டுகிறார், எவர்க்கும் பயப்படாமல், திமிருடன், யாரும் தன்னை எதுவும் செய்ய முடியாது என்று. இந்த ஆனவம் வந்ததற்கு காரணங்கள் என்று பார்த்தால் அ) அங்குள்ளவர்கள் அனைவரும் இந்த லஞ்சம் வாங்கும் network-ல் இருப்பதால், ஆ) அங்குள்ள உயர்ந்த பொருப்பில் உள்ளவரிடம் எல்லா அதிகாரம் உள்ளதால். (அந்த Inspector நினைதால் ஒருவருடைய உரிமத்தை ரத்து செய்ய முடியும்) இ) இப்படி லஞ்சம் வாங்குபவரை வேறு வழி இல்லை என்று நினைத்துக் கொண்டு சகித்துக்கொண்டிருக்கும் பொதுமக்கள் (என்னையும் சேர்த்து). மற்றும் மிக முக்கியமாக ஈ) அந்த அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பணி நிரந்தரம் என்னும் மந்திரகோல். இது ஒன்றுதான் எல்லவற்றையும் செய்கிறது.

அந்த அலுவலகத்தில் வேலை செய்யும் அனைவரும், குமாஸ்தா முதல், உயர் பொருப்பில் இருப்பவர் வரை அங்கு வருபவர் அனைவரையும் வாய்க்கு வந்தபடி கத்துகிறார்கள் (ஒரு கிராமத்தான் என்றால் இந்த "மரியாதை" கூட கிடைக்காது. எல்லாம் வாயா போயா தான்) . அங்கு வருபவர்கள் அனைவரும் இதை சகித்துகொண்டு தான் இருக்கிறார்கள். இவர்களுக்கு யார் இந்த அதிகாரத்தை கொடுத்தது. மக்கள். மக்கள் தாங்கள் வாங்கும் ஒரு தீக்குச்சிக்கு கூட வரி கட்டுகிறார்கள். அவர்களின் வரிப் பணத்தில் சம்பளம் வாங்கும் இந்த வேலைக்காரர்கள் அவர்கள் கடமையை செய்ய முதலாளிகள் என்ன என்ன பேச்சு வாங்க வேண்டியிருக்கிறது. சரி! இப்படிப்பட்ட நிகழ்வுகளுக்கு யார் வேண்டுமானாலும் நீதிமன்றங்களுக்கு செல்ல வழி உண்டுதான். ஆனால் கோமா நிலையில் உள்ள, செல்லரித்த நீதிமன்றங்களால் என்ன செய்ய முடியும். 1985-ல் நிகழ்ந்த போபால் விஷவாயு சம்பவத்திற்க்கே இப்பொழுது தான் தீர்ப்பு வந்திருக்கிறது. அதனால் நீதிமன்றங்களை நம்பி பயன் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

நான் என்ன செய்ய?

1) நான் பூர்த்தி செய்த பாரத்தை என்னுடைய நண்பன் மூலம் இன்னொரு இடைத்தரகரிடம் கொடுத்துள்ளேன். அவர் எனக்கு கொஞ்சம் செலவு ஆனாலும் (லஞ்சம் தான்), LLR எடுத்து தருவதாக கூறியிருக்கிறார். (கவனிக்க, LLR விண்ணப்பிற்க சம்பந்தப்பட்ட நபர் நேரடியாக செல்ல வேண்டும் என்பது விதி).

2) ஒரு வேலை அவரால் எனக்கு LLR விண்ணப்பிற்க முடியாமல் போனால், நான் பெங்களூரில் விண்ணப்பித்துவிடுவேன் (பிரச்சினையே பெருநகரங்களில் ஓட்டுனர் உரிமம் பெருவது மிகவும் கடிணம்). அது 6 மாதத்திற்கு செல்லுபடியாகும் என்பதால், இங்கு விண்ணப்பித்து விட்டு அடுத்த 6 மாதங்களில் என்னால் முடியும் பொழுது வாணியம்பாடிக்கு சென்று மீண்டும் விண்ணப்பித்து விடுகிறேன்.


Friday, April 30, 2004

தண்ணீர்! தண்ணீர்!!




தமிழ் நாட்டில் தண்ணீர் பிரச்சினை பெரும் அபாய கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. சென்ற முறை நான் என் ஊருக்கு சென்ற பொழுது அந்தக் கொடுமையை கண் கூடாக பார்க்க, அனுபவிக்க முடிந்தது. மாதம் இரு முறை மட்டுமே தண்ணீர் விடப்படும். அழுகிற பிள்ளைக்கு வாழைப்பழம் கொடுப்பதைப் போல, நான் சென்ற அன்று நகராட்சி லாரியில் தண்ணீர் விட்டனர். ஆதற்கு எங்கள் தெருவில் செய்திருந்த ஏற்பாடு வியப்பில் (தண்ணீர் கொடுமையின் அவலம்?) அழ்த்தியது. ஆதாவது, ஒவ்வொரு வீட்டிற்கும் ஒவ்வொரு எண்ணுள்ள சீட்டு வினியோகிக்கப்படுகிறது। இந்த சீட்டை தண்ணீர் பிடிக்கும் பொழுது கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் 3 அல்லது 4 குடங்கள் தண்ணீர் (நிலைமையை பொருத்தது) விடப்படும். இந்த சீட்டுக்கள் தண்ணீர் பிடிக்கும் பொழுது தந்து விட வேண்டும். திரும்பவும் தண்ணீர் வினியோகிக்கப்பட்டு முடிந்ததும் அவரவர் சென்று சீட்டுக்களை பெற்றுக் கொள்ள வேண்டும். (ரேஷன் ?)
நான் சென்ற அன்று என் வீட்டில் 3 காலி குடங்கள் கொடுத்து என்னை அனுப்பினார்கள். நான் போர்க்களத்திற்க்கு செல்லும் வீரனைப் போல ஆயுதங்களுடன் (வேறன்ன, 3 குடங்கள் தான்) சென்ற போது தான் தெரிந்தது, நான் சென்றது நிஜமாகவே ஒரு போர்க்களம் என்று. அங்கே ஒரு பெருங்கூட்டம் வரிசையில் குடங்களை வைத்திருந்தார்கள். அந்த இடம் காலி குடங்களின் கண்காட்சியைப் போல இருந்தது. நான் கடைசியாக சென்று குடங்களை வைத்த பொழுது, ஒரு அசரீரி, "சீனு! குடங்களை இங்கு கொண்டு வா!!" என்று. அட! யாறென்று பார்த்தால் என் தங்கை (என் சித்தி பெண்). மனதிற்குள் சின்ன அல்ப சந்தோஷம் தோன்றியது. ஆனால், என்னுடைய மனசாட்சி, "இத்தனை மக்கள் ஒழுங்காக வரிசையில் போகும் பொழுது நீ மட்டும் இடையில் சென்றால் உதைப்பேன்" என்றது. நானும் அவளிடம், "நான் இங்கேயே குடங்களை வைக்கிறேன்" என்றேன். உடனே அவள், "அடடா! ரொம்ப தான் நியாயம் பார்க்கிறாய். கவலை படாதே! நான் உனக்கும் சேர்த்து தான் குடங்களை போட்டிருக்கிறேன்" என்றாள். சரி என்று நானும் என் குடங்களை அவள் இடம் பிடித்த இடத்தில் என் குடங்களை வைத்தேன். 2 பெரிய குடங்கள் கடன் வாங்கி (என் வீட்டுக் குடங்கள் சிரியதாக இருந்ததால் என் தங்கையின் அறிவுரைப் படி) தண்ணீர் பிடித்தேன். அன்று என் வீட்டில் நான் தான் ராஜா.

சரி. இந்த நிலைமைக்கு யார் காரணம். அரசியல்வாதிகளா? மக்களா? அதிகாரிகளா? இயற்கையா? யார்??????

இயற்கையை குற்றம் சொல்ல முடியாது. காரணம், மனிதனால் இயற்கையை வெல்லவும், பழிக்கவும் முடியாது. அப்படியே வென்றாலும் அன்று தான் இந்த உலகின் கடைசி நாளாக இருக்கும்.

நம் ஆட்சியாளைர்களிடம் (அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள்) தண்ணீர் பிரச்சினையை தீர்க்க ஒரு நல்ல நீண்ட கால திட்டம் எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. மேலும் தண்ணீர் பிரச்சினை தலை தூக்கும் பொழுதெல்லாம், அதை நிரந்தரமாக யாரும் தீர்ப்பதில்லை. உதாரணமாக, ஆற்று நீர் கிடைக்காத போது நாம் கிணறு தோண்டினோமே தவிர வேறு நிரந்திர வழி தேடவில்லை. கிணறுகள் வற்றியதும் ஆழ்துளை கிணறுகள் தோண்டினோமே தவிர வேறு நிரந்திர வழி தேடவில்லை. இன்று ஆழ்துளை கிணறுகளும் வற்றியதும் கடல் நீரை குடி நீராக மாற்றவும், நதிகளை இணைக்கவும் மட்டுமே சிந்திக்கிறோம். மரம் நட்டால் தான் மழை பொழியும் என்று நம் அரசு என்ன தான் கரடியாக கத்தினாலும் நாம் அதை கவனிக்காமல் கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணம் செய்து வைத்து வாணத்தையே அன்னாந்து அல்லவா பார்க்கிறோம். சரி! நம் முன்னோற்கள் இது போல தண்ணீர் பிரச்சினை வந்த பொழுது என்ன செய்திருப்பார்கள்? இதோ! சற்று பின் நோக்கிப் பார்ப்போம்!!

வெள்ளையர்கள் நம்மை ஆண்ட பொழுது நடந்த ஒரு சம்பவம். ஒரு சமயம் தென் இந்தியாவில் தண்ணீர் பஞ்சம் வந்த பொழுது, நீர் நிலைகளை ஆராய்ச்சி செய்ய வெள்ளையர்கள் தமிழ் நாட்டிற்கு வந்தனர். அப்பொழுது இருந்த அந்த நீர் நிலைகளின் பின்னலை (Network) பார்த்து அதிசயித்தனர். அதாவது, ராமநாதபுரத்தில் ஒரு குளம் இருக்கும். மழைக் காலத்தில் அந்த குளம் நிரம்பியதும், அந்த குளத்தில் இருந்து வடியும் உபரி நீர், வழிந்து சென்று அடுத்த ஊரில் இருக்கும் குளத்தை நிறப்பும். இது அப்படியே அடுத்த ஊருக்கும் தொடரும். இந்த முறையால், நம் முன்னோர்கள் வறட்சியை விரட்டி அடித்தனர். இந்த முறையால், தண்ணீர் பிரச்சினை தீர்வதுடன் அதிக மழை பொழியும் பொழுது வெள்ளத்தையும் தவிர்க்கும். ராமநாதபுர மாவட்டம், முன்பு செழிப்போடு தான் இருந்திருக்கிறது. ஆனால் இப்பொழுது? நாம் நம்முடைய குளாங்களை வனிக வளாகமாக மாற்றிக்கொண்டிருக்கிறோம். ஆற்றையும், குளத்தையும் தூர் வாரும் ஒப்பந்த்தில் ஊழல் புரிந்திருக்கிறோம்.

இயற்கை ஒரு புதையல் தான். ஆனால், எடுக்க எடுக்க குறையும் அமுத சுரபி அல்ல. இயற்கைகும் ஒரு எல்லை உண்டு. அந்த எல்லை நம்மால் தொட முடியாது. தொட முயன்றால் தோல்வி தான் கிடைக்கும். இயற்கை நமக்குக் கொடுக்கும் வளங்களை முடிந்த வரை சிக்கனமாக உபயோகிக்க பழக வேண்டும். இருப்பதை வைத்து மேலும் நம் வளங்களை பெருக்க வேண்டுமே தவிற, இருப்பதை உபயோகிக்க மட்டும் (அழிக்க) முயலக்கூடாது. இந்த உலகில் ஒவ்வொரு உயிரும் இன்னொரு உயிரை சார்ந்து தான் வாழ முடியும், வாழ வேண்டும். ஒரு இனம் இன்னொரு இனத்தை அழித்தால் மற்றொரு இனமும் தானாக அழியும். இதற்கு இயற்கையை வைத்தே உதாரணம் சொல்ல முடியும். இந்த உலகில் ஆபத்தான விலங்குகளான சிங்கம், புலி போன்ற மாமிசப் பட்சினிகள் (Carnivorous) இல்லை என்று வைத்துக்கொள்வோம். அதனால் சைவ பட்சினிகளான (Herbivorous) மான், முயல் போன்றவை இந்த உலகில் உள்ள செடி, கொடிகளை மேய்ந்து விடும். இதை தடுத்தல் மிகவும் கடினம். இதனால் உலகில் செடி, கொடிகள் குன்றிப் போய் மழை பொய்த்துப் போகும். இது ஒரு கற்பனை தான் என்றாலும், இது நிச்சயம் நடக்கக்கூடியது. இதைத்தான் "ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா?" என்ற வரிகளைப் பிரதிபலிக்கின்றன. ஆக, இந்த உலகமே ஒரு பரந்த, மிகப்பெரிய பரந்து விரிந்த வலைப் பின்னல் (Network). ஒரு உயிர் வாழ, மற்றொரு உயிர் அவசியம் ஆகிறது. மனிதன் தன் பேராசைக்காக ஒரு உயிரினத்தை அழித்தால், அது அவனையே திருப்பி பாதிக்கும். இது ஒர் நிதர்சன உண்மை. அந்த இனம் எரும்பாக இருந்தாலும் சரி, இல்லை எருமையாக இருந்தாலும் சரி. ஒரு மரத்தை வெட்டினால் அதன் பாதிப்பு அடுத்த மழையின் போது (நம்மால் உணறமுடியாத) அளவு பாதிப்பு இருக்கும் என கண்டுபிடித்து உள்ளனர். இதை திரு. ஐசக் நியூட்டன் சொல்வது போல, "ஒவ்வொரு வினைக்கும் ஒர் சரிசமமான எதிர்வினை உண்டு". (For Every Action there is an Equal and Opposite Reaction).

ஒரு நாட்டில் மக்களுக்கும், அரசுக்கும் இடையே ஒரு முக்கிய உறவுப் பாலமாக இருப்பது (இருக்கவேண்டியது) அரசு அதிகாரிகளே. ஆனால் நம் நாட்டில் என்ன நிலைமை என்று நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இயற்கை எப்படி ஒரு மிகப் பெரிய வலைப் பின்னலோ, அதைப் போல நம் நாட்டில் அதிகாரிகள் மட்டத்தில் இருக்கும் ஊழல் மற்றும் கடமை தவறுதள் ஒரு மிகப்பெரிய வலைப் பின்னல். இதன் விளைவுகள் படு பயங்கரமானவை. உதாரனமாக, அமெரிக்காவில் வசிக்கும் ஒருவர் (பெயர் நினைவில்லை), தன்னுடய முனைவர் பட்டத்திற்க்கு (P.Hd.) ஒர் ஆய்வு மேர்கொள்ள இந்தியா வந்தார். அவருடைய ஆய்வு இந்தியாவில் நடக்கும் லஞ்ச ஊழலைப் பற்றியது. அதற்காக அவர் கொல்கத்தா சென்று ஒரு தொழில் தொடங்க அனுமதி பெற ஒரு தாசில்தார் அலுவலகத்திற்குச் சென்றார். அங்கே ஒரு மிகப் பெரிய வரிசை இருப்பதைக் கண்டார். எதற்கு எனக் கேட்டபொழுது, அவர்கள் சில வேலைகளுக்காக நீண்ட நேரம் காத்துக்கொண்டிருப்பதாகவும், அப்படி நிற்பது தினமும் வாடிக்கையான ஒன்று தான் எனவும் சலிக்காமல் கூறினர். அதில் சிலர் இவரைப் போலவே ஒரு சிறு தொழில் தொடங்க அனுமதிப் பெறுவதற்க்கும் வரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றனர். எந்த அதிகாரிகளும் இவர்களை கண்டுகொள்ளாதிருப்பதை பார்த்து இவர் சம்பந்தப்பட்ட நபர் யார் என்று அறிந்து அவரைப் பார்க்க விரும்பினார். அந்த சம்பந்தப்பட்ட அதிகாரியை இவர் பார்த்து நிலைமையை கூற, அந்த அதிகாரியோ வங்க மொழியில் ஏதேதோ கூறினார் (இவருக்கு வங்க மொழி தெரியாது என்று அறிந்தும்). பிறகு அந்த அமெரிக்கர் ஹாங்காங் சென்றார். அங்கு காலை 10 மணிக்கு சென்ற அவர், சுமார் 3 மணி நேரத்தில் எல்லா வேலைகளையும் முடித்து அன்றைய மாலைக்குள் வியாபாரத்தையும் தொடங்க முடிந்தது. அதே போல பாரத் சஞ்சர் நிகம் லிமிடெட் நிறுவனத்தில் ஒரு டென்டர் விட சுமார் 19 மாதங்கள் பிடிக்கிறதாம். அதற்குள் 5 முறை தொழில் நுட்பம் மாறிவிடுகின்றது. இந்தியன் திரைப்படத்தில் கூறப்படுவதைப் போல் வெளிநாடுகளில் கடமையை மீறுவதற்க்காக லஞ்சம் வாங்குகின்றனர். ஆனால் இந்தியாவில் கடமையை செய்வதற்க்கே லஞ்சம் கேட்கின்றனர். திருடனாய் பார்த்துத் திறுந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

மீண்டும் தண்ணீர் பிரச்சினைக்கு வருவோம். மேற்கூறிய காரணங்கள் தண்ணீர் பிரச்சினையில் இப்பொழுது நான் அவதிப்படுவதற்கு மறைமுகமாக காரணங்களாக உள்ளது. இந்த பிரச்சினைக்கு என்ன தான் தீர்வு? இயற்கையிடம் இருந்து திருடுவதை விட்டு, நீர் நிலைகளைப் பெருக்கலாம். நீர் நிலைகளைப் பெருக்க நீரை சேமிப்பது மிக மிக அவசியம். இது மக்களுக்கான திட்டம். மக்களும் இந்த கொடுமையை நான்றாக உணர்ந்துள்ளனர். அதனால் அவர்களையும் இந்த திட்டத்தில் சேர்த்துக்கொள்ளலாம். நிச்சயமாக மக்கள் உதவுவார்கள். குளங்களை வனிக வளாகங்களாக மாற்றுவதை விட்டு, அவற்றை தூர் வாரி சுத்தம் செய்ய வேண்டும் (ஊழல் இன்றி). இதை மக்களைக் கொண்டு, பிரித்தாளும் முறையில், செய்யலாம் (இது தான் அரசியல்வாதிகளுக்கு கை வந்த கலையாயிற்றே...). இதற்கு தனியாக ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும். இந்த திட்டம் நிறைவேற, சத்தியமாக அரசியலை கலக்க கூடாது. அதனால், இந்த அமைப்பை எந்த மாநில அரசின் கட்டுப்பாடில் இருக்கக் கூடாது. மக்களும் தன் பங்கிற்கு, வீடுகள் தோறும் மழை நீரை சேமித்து வைக்கலாம். மேலும் நீரை சேமிக்க பல வழிகள் உள்ளது. உதாரணமாக...வீட்டில் கழிப்பறையை சுத்தப்படுத்த, துணி துவைக்கப் பயன்படுத்திய தண்ணீரைப் சுழற்சி முறையில் பயன்படுத்தலாம். அந்த நீரை தனியாக ஒரு சாதனத்தை (Motor-ஐப் போல) உபயோகப்படுத்தி ஒரு சிறிய தொட்டியில் சேமிக்கலாம். அந்த தொட்டியை கழிப்பறையுடன் இணைத்து சுத்தப்படுத்த (Flush) உபயோகப் படுத்தலாம். இந்த முறையில் ஒவ்வொரு வீட்டிலும் கணிசமான தண்ணீரை சேமிக்கலாம். (நன்றி. உபயம் ஜெயா தொலைக்காட்சி!!!).

ஒரு நல்ல நீண்ட கால திட்டத்தை உருவாக்கி அதை கண்டிப்புடன் செயல் படுத்த வேண்டும். இப்படி ஒரு திட்டம் வந்தால், அதற்கு மிகப் பெறிய எதிரியாக ஊழல் மட்டுமே இருக்க முடியும். இதை முறியடிக்க, இந்த திட்டத்தை சமூக அக்கறையுள்ள சில அமைப்புகளிடம் ஒப்படைக்கலாம். உதாரனமாக ஆன்மீக நாடான இந்தியாவில் இருக்கும் சில பெரிய அமைப்புகளான சாயிபாபா, மாதா அமிர்தானந்தமாயி போன்றோர்களை இந்த சேவையை செய்ய சொல்லலாம். Trust மூலமாக சொத்துக்களை சேர்த்து இந்த பெரியவர்களாகிய சாமியார்கள் என்ன செய்ய போகிறார்கள்? அவர்கள் சொத்துக்கள் மக்களைத் தான் சென்றடையட்டுமே! அவர்கள் கொடுத்தது தானே!! இது அவர்களாக முன் வர வேண்டியது. நாம் சொல்லி தெரியவேண்டியதில்லை.

இந்த நாட்டில் இல்லாத வளங்களா? இருந்தும் நாம் ஏன் இப்படி இருக்கிறோம். நீரின்றி அமையாது உலகு என்ற சொல்லை இன்று தான் நாம் உணர்ந்திருக்கிறோம். இன்னும் நாம் செய்ய வேண்டியது நிறைய உள்ளது. இந்த பிரச்சினைகளை எப்படி தீர்க்கப்போகின்றோம்? இதைப் படித்தவர்கள் தயவு செய்து ஒரு முறை கண்ணை மூடி சிந்தித்துப்பார்க்கவும். யாராவது ஒருவருக்கு தீர்வுக்கான வழி கிடைக்கலாம்.

வாழ்க ஜனநாயகம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக